அதிகரித்த கடன் பிரச்சனையின் காரணமாக இரண்டரை வயது சிறுமியை கொன்று கண்களை தோண்டி எடுத்து புதைத்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் தப்பால் என்னும் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் மகளொருவர் உள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு ஏற்பட்டிருந்த பெரும் பணப்பிரச்சினை காரணமாக அதே பகுதியில் இருக்கும் ஷாகித் மற்றும் அஸ்லாமிடம் ரூ.10,000 கடனாக வாங்கியுள்ளனர்.

ஆனால், கடனை திரும்பி அடைக்க தாமதித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் அந்த தம்பதியினரின் மகள் திடீரென காணாமல் போகியுள்ளார். இது குறித்து பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்களாக தேடி வந்துள்ளனர். அப்போது மோப்ப நாய் கொண்டு தேடியதில் அந்த நாய் ஷாகித் மற்றும் அஸ்லாமின் வீட்டை சுற்றி வந்துள்ளது.

இதனால் சந்தேகத்தின் பெயரில் மோப்ப நாய் நோட்டமிட்ட பகுதியை தோண்டிய போது சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது சிறுமியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஷாகித் மற்றும் அஸ்லாமை விசாரித்த பொலிஸார், அந்த கொடூரர்கள் தான் கொலை செய்துள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் இவ்வாறு செய்ததாக அந்த கொடூரர்கள் தெரிவித்துள்ளமை பொலிஸாருக்கு பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.