உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­ச­ராக இருக்கும் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அனைத்து பாது­காப்­புத்­த­ரப்­பி­ன­ருமே பொறுப்­பா­ளி­க­ளா­கின்­றனர். அச்­சம்­பவம் குறித்த பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து வில­கிச்­செல்­வ­தற்­காக முஸ்லிம் சமூ­கத்­தினை இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­ற­தென ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தியேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- எமது நாட்டில் வஹாப் சிந்­த­னைகள் அதி­க­ரித்­துள்­ளதால் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வதம் வலுப்­பெற்­று­வ­ரு­கின்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில்:- வஹாப் சிந்­தனை உடைய அனை­வ­ருமே அடிப்­ப­டை­வா­திகள் என்று கூறி­வி­ட­மு­டி­யாது. கடந்த 30ஆண்­டு­க­ளுக்குள் தான் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து வஹாப் வாதம் இலங்­கைக்குள் வந்­தி­ருக்­கின்­றது. வஹாப் சிந்­தனை உடை­ய­வர்கள் இஸ்லாம் சம­யத்தின் மீது இறுக்­க­மான பற்­றைக்­கொண்டு பின்­பற்­று­வார்கள். இதனை தன்­னு­டைய சம­யத்­த­வர்­களோ அல்­லது வேறு சம­யத்­த­வர்­களோ ஏற்­றுக்­கொள்­ளாத போது சில சம­யங்­களில் கருத்­தியல் ரீதி­யான முரண்­பா­டு­க­ளுக்குச் செல்­வ­துண்டு. ஆகவே, அத்­த­கைய வஹாப் சிந்­தனை மூலம் தான் அடிப்­ப­டை­வாதம் உரு­வா­கின்­றது என்று முழு­மை­யாக கூறி­விட முடி­யாது. 

இஸ்லாம் 1400ஆண்டு வர­லாற்­றினைக் கொண்­டி­ருக்­கின்­றது. காலத்­திற்­கு காலம் பல அறி­ஞர்கள் வெவ்­வேறு வகையில் விளக்­கங்­களை வழங்­கி­யுள்­ளார்கள். சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்த அபு­தை­மியா இறுக்­க­மான விளக்­க­மொன்றை வழங்­கி­யி­ருந்தார். மத்­திய கிழக்கில் யுத்தம் நடை­பெற்ற காலத்தில் தான் அவ்­வா­றான விளக்கம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆகவே அவ­ரு­டைய இஸ்­லா­மிய விளக்­கங்கள் அனைத்­துமே யுத்­தத்­தி­னையே அடிப்­ப­டை­யாக கொண்­டி­ருந்­தன. 

அதன் பின்னர் அப்துல் வஹாப் என்­பவர் தலை­மை­யி­லான செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளாக இருந்­தாலும் சரி, முஸ்­லிம்­களுள் வஹாப் சிந்­த­னை­களை எதிர்ப்­ப­வர்­க­ளு­டனும் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. இதற்கு துணை­யாக சவூதி அரே­பி­யாவே இருந்­தது. பின்­ன­ரான காலத்தில்  வஹாப் சிந்­த­னைகள் உல­க­ளா­விய ரீதியில் கொண்டு செல்­வ­தற்கு  மேற்­கு­ல­கமே சவூதி அரே­பி­யா­வுக்கு ஆத­ர­வாக இருந்­தது. 

இஸ்­லா­மிய நாடு­களை கட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­கா­கவே அமெ­ரிக்கா ,ஐரோப்­பிய நாடுகள் அவ்­வா­றான ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தது. தற்­போ­தைய சூழலில் மேற்­கு­லத்தின் கட்­டுப்­பாட்­டிற்கு அப்பால் செல்லும் நிலை­மை­களும் ஏற்­பட்­டுள்­ளன. இதனால் தான் பிரச்­சி­னைகள் அதி­க­மாக எழு­கின்­றன.  

கேள்வி:- தௌஹீத் சிந்­த­னைகள் அடிப்­ப­டை­வா­தத்­தினை உரு­வாக்­கு­கின்­ற­னவா?

பதில்:- தௌஹீத் ஜமா­அத்தின் சிந்­த­னை­களும் சாதா­ரண இஸ்­லாத்­தி­லி­ருந்து சற்று வேறு­பட்­ட­தாக இருக்­கின்­றது. ஆனாலும் அத்­த­கைய அமைப்­புக்கள் அடிப்­ப­டை­வா­தத்­தினை கொண்­டி­ருக்­க­வில்லை. அத்­த­கைய அமைப்­புக்கள் ஏகத்­துவ இறை­கொள்­கை­யையே கூறு­கின்­றன. ஆனால் நமது நாட்டில் தௌஹீத் ஜமா­அத்தின் பெயரில் செயற்­பட்­டி­ருந்த சிறு குழு­வினர் இஸ்லாம் சிந்­த­னை­க­ளுக்கு அப்பால் சென்று பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை­போ­யி­ருக்­கின்­றார்கள். 

இஸ்லாம் சம­யத்­தினை இறுக்­க­மாக பின்­பற்றும் வஹாப்­வா­தி­க­ளையும், தௌஹீத் ஜமாத் அமைப்­புக்கள் போன்­ற­வற்றின் பெயர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வெவ்­வேறு விளக்­கங்­களை பலர் வழங்­கு­கின்­றார்கள். இதனால் அச்­ச­மான நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 

தமி­ழீழம் என்ற பெயரில் செயற்­பட்ட எல்லா அமைப்­புக்­க­ளையும் எவ்­வாறு பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளாக அன்று பார்த்­தார்­களோ அது­போன்று தான் தௌஹீத் என்ற பெயரில் உள்ள அனைத்து அமைப்­புக்கள் மீதும் சந்­தே­கங்­களைக் கொள்­கின்­றார்கள். சாதா­ரண இஸ்­லா­மி­யர்கள் பின்­பற்றும் முறை­க­ளி­லி­ருந்து சற்றே வேறு­பட்­ட­தாக தௌஹீத் சிந்­த­னைகள் காணப்­ப­டு­கின்­ற­போதும் அவை இலங்கை சட்­டங்­க­ளுக்கு எதி­ரா­னவை அல்ல. 

ஒட்­டு­மொத்த இலங்­கைவாழ் முஸ்­லிம்­களில் ஆகக்­கூ­டு­த­லாக 300 பேரே இந்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள். 25பேர் உயி­ரி­ழந்து விட்­டார்கள். 90பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். 125முதல் 135பேர் வரை­யி­லா­ன­வர்கள் துணை­போ­னார்கள் என்ற சந்­தே­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். தற்­போது பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள் என்றே கூற­வேண்­டி­யுள்­ளது. 

கடந்­த­வாரம் புல­னாய்வு கட்­ட­மைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றில் பங்கு பற்­றி­யி­ருந்தேன். புல­னாய்வுத் தரப்­பினர் வஹாப், தௌஹீத் சிந்­தனை அமைப்­புக்கள் பற்­றிய போதிய அறி­வினைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய தக­வல்­களின் பிர­காரம் இலங்­கைக்கு உட­னடி ஆபத்­தொன்று இல்லை என்றே அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளார்கள். 

கேள்வி:- மத­ர­ஸாக்கள் தொடர்­பான சட்­டங்கள் மீளாய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­யமா? 

பதில்:- மத­ரஸா என்­பது பாட­சாலை. அர­பு­மொ­ழியில் மத­ரஸா எனப்­ப­டு­வதால் அந்தச் சொல்லை முன்­னி­லைப்­ப­டுத்தி பேசு­கின்­றார்கள். என்னைப் பொறுத்­த­வ­ரையில், மத­ர­ஸாவில் கற்­பிப்­பவர் யார், கற்­ப­வர்கள் யார், எவ்­வாறு பணம் கிடைக்­கின்­றது, அதன் செயற்­றிட்டம் என்ன என்பது பற்றி அறிந்து கொள்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு உரிமை உள்­ளது. இந்த விட­யங்­களை உள்­ளீர்த்து ஒரு ஒழுங்­க­மைப்பை செய்­ய­வேண்­டி­யுள்­ளது. அதில் பிரச்­சினை இல்லை. ஆனால் திட்­மிட்ட வகையில் மத­ர­ஸாக்­களை முடக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

எமது நாட்டின் அடுத்த சந்­த­தி­யா­க­வி­ருக்கும் சிறு­வர்கள் 13வருட முறைசார் கல்­வியை கற்­க­வேண்டும். எட்டு, ஒன்­பது வய­தி­லி­ருந்து குர் ஆனையும், ஹதீ­ஸையும் மட்டும் கற்க வேண்­டி­ய­தில்லை. ஏனை­ய­வற்­றையும் கற்க வேண்டும். அதன்­மூ­லமே ஒற்­று­மை­யு­ட­னான கூட்­டி­ணைந்த பன்­மைத்­துவ சமு­தா­யத்­தினை கட்­டி­யெ­ழுப்ப முடியும். 

கேள்வி:- முஸ்­லிம்­களின் கலா­சார ஆடை சம்­பந்­த­மாக புதிய சுற்­று­நி­ருபம் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அது அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தாக பிரஸ்­தா­பிக்­கப்­ப­டு­கின்­றதே?  

பதில்:- முஸ்­லிம்­களின் கலா­சார ஆடை சம்­பந்­த­மாக நான் சற்றே மாற்­றுக்­ க­ருத்­துக்­களை கொண்­டி­ருக்­கின்றேன். முஸ்­லிம்கள் அணிய வேண்­டிய ஆடை பற்றி இஸ்­லாத்தில் ஒளரத் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் ஆண், பெண்கள் ஆடையால் மறைக்க வேண்­டிய பாகங்கள் தொடர்­பாக விரி­வாக கூறப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யி­ருக்­கையில், சவூதி அரே­பியா, பாகிஸ்தான் போன்ற நாடு­களின் ஆடை முறை­மை­களை பின்­பற்ற வேண்­டி­ய­தில்லை. 

முழு­மை­யாக முகத்தை மூடியோ அல்­லது கறுப்பு நிற ஆடை­க­ளையோ அணிய வேண்­டிய அவ­சியம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இல்லை. எமது நாட்டின் நிய­தி­க­ளுக்கு அமை­வாக ஏனைய இனங்­க­ளுடன் இணைந்து செல்­வ­தற்­காக சில மாற்­றங்­களை செய்­யலாம். அதற்­காக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­க­ளுக்கு அப்பால் செல்ல முடி­யாது. 

இவ்­வா­றுதான் ஆடை அணிய வேண்டும் என்று பிறி­தொரு தரப்­பினர் கூறு­வ­தற்­காக அவ்­வா­றான ஆடை­களை அணிய முடி­யாது. ஏனைய சமூ­கங்­க­ளு­ட­னான இணக்­க­மான வாழ்­வுக்­காக, தேசிய பாது­காப்­புக்­காக சில விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்ய முடியும். அதற்­காக, ஹிஜாப், அபாயா ஆகி­ய­வற்றைக் கூட அணியக் கூடாது என்று கூறு­வது இன ரீ­தி­யான பார­பட்­ச­மாகும். 

கேள்வி:- முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துச்­சட்டம் போன்ற சமூக­ரீ­தி­யான பாரம்­ப­ரிய தனித்­துவ சட்­டங்­களை பின்­பற்­று­வது தொடர்­பா­கவும் சந்­தே­கங்கள் எழுப்­பப்­ப­டு­கின்­ற­தல்­லவா?

பதில்:- 1851ஆம் முஹ­மது ஆண்­டி­லி­ருந்து முஸ்­லிம்­க­ளுக்­கான சட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. அத்­த­கைய பாரம்­ப­ரிய சட்­டங்­களை எழுந்­த­மா­ன­மாக மாற்­றி­ய­மைக்க முடி­யாது. 12, 14வய­து­களில் முஸ்லிம் பெண் பிள்­ளைகள் திரு­மணம் செய்யும் நிலை­மை­களை மாற்றி திரு­மண வய­தெல்­லையை 18ஆக மாற்ற வேண்டும் என்­பது எமது சமூ­கத்­தி­னதும் நிலைப்­பா­டாகும். இத­னை­வி­டவும் முஸ்­லிம்கள் ஒன்­றுக்கு மேற்­பட்ட திரு­ம­ணங்­களை செய்­வது குறித்து காணப்­படும் சட்ட ஏற்­பாடு பற்­றியும் பேசப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் உள்ள முஸ்­லிம்­களில் எத்­தனை பேர் இரண்டு திரு­ம­ணங்­களை செய்­துள்­ளனர் என்­ப­தையும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.  

கேள்வி:- அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் நாட்டில் பொதுச்­சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்­பது பற்றி?

பதில்:- பொதுச்­சட்­ட­மொன்றை கட்­ட­மைப்­பதில் தவ­றில்லை. ஆனால் கண்­டியச் சட்டம், தேச­வ­ழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவ­கா­ரத்துச் சட்டம், வக்பு சட்டம் ஆகி­யன தனித்­துவ சட்­டங்­க­ளாக இருக்­கின்­றன. இவை பல­நூறு ஆண்­டு­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளத்­தினை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த சட்­டங்கள் தடை­யாக இருந்­தி­ருக்­க­வில்­லையே.  வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் காலத்­துக்கு காலம் நடை­பெறும் சிறு­ வி­ட­யங்­களை பூதா­கா­ர­மாக்கி சிறு­பான்மை சமூ­கங்கள் மீது திட்­ட­மிட்டு தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் நிலை­மை­களே நடை­பெற்று வரு­கின்­றன. 

1956, 1978, 1983 1987, 1989 ஆகிய வரு­டங்­களில் தமி­ழர்கள் மீதான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. முப்­பது வருடம் யுத்தம் நடை­பெற்­றது. பின்னர் 2014இல் அளுத்­கமவில்,  2018இல் திக­ணவில் 2019இல் குரு­நா­கலில் முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. 

இவ்­வாறு தனிப்­பட்ட மனி­தர்கள் இன­ரீ­தி­யாக சட்­டத்­தினை கையி­லெ­டுக்கும் நிலை­மை­களை போக்­கு­வது பற்றி சிந்­திக்க வேண்டும். பொதுச்­சட்டம் பற்றி பேசக்­கூ­டாது என்று நான் கூற­வில்லை. சந்­தர்ப்­பத்­தினைப் பயன்­ப­டுத்தி சிறு­பான்மை இனங்­க­ளுக்­காக காணப்­படும் சிறப்பு சட்­டங்­களை நீக்­கு­வ­தற்­காக பொதுச்­சட்டம் என்று கோஷ­மெ­ழுப்­பு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

21 பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்­காக 2மில்­லியன் முஸ்­லிம்­களை அடக்­கு­மு­றைக்கு உள்­ளாக்க முடி­யாது. தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மை­களை பயன்­ப­டுத்தி அத்­த­கைய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­ற­போது முற்­போக்­கான, நடு­நி­லைமை முஸ்­லிம்­களின் மன­நி­லை­யிலும் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வித்­திடும் நிலை­மை­களே உரு­வாகும். அது நாட்­டிற்கு ஆபத்­தா­னது. 

1983இல் விடு­த­லைப்­பு­லி­களை மைய­மாக வைத்து அனைத்து தமி­ழர்­களும் விடு­த­லைப்­பு­லி­களே என்ற சிந்­த­னை­யுடன் செயற்­பட்­டதால் தான் தமி­ழர்கள் விடு­த­லைப்­போ­ராட்­டத்துக்கு ஆத­ர­வ­ளிக்கும் மன­நி­லைக்கு தள்­ளப்­பட்­டார்கள். இதனால் தான் மூன்று தசாப்த யுத்­தமும் நடை­பெற்­றது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். 

கேள்வி:- ஷரீஆ சட்டம், ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­ப­டுதல் தொடர்பில் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- இலங்­கையில் ஷரீஆ சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. ஷரீஆ என்­பது முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்­கான சட்டம். அதில் சில விட­யங்­களை இலங்கை சட்­டத்­திற்கு உட்­பட்­ட­வாறே நடை­மு­றைப்­ப­டுத்த முடியும். அவ்­வாறு தான் இங்கு ஏற்­பா­டுகள் உரு­வாக்­கப்­பட்டு நடை­மு­றையில் உள்­ளன. அதே­போன்று தான் ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் பற்றி கூறப்­ப­டு­கின்­றது. 

இலங்­கையில்  பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தென்றால் பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவின் அனு­ம­தி­யுடன் தான் அது உரு­வாக வேண்டும். சட்­டக்­கல்­வி­யின்­போது இங்­கி­லாந்து, ரோம் சட்­டங்­க­ளையும் கற்­கின்றோம். அது­போன்று ஷரீஆ சட்­டத்­தி­னையும் கற்க முடியும். ஆனால் அதனை கற்­பிப்­ப­தற்­கான அனு­ம­தியை பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவே வழங்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து ஜனா­தி­பதி நிய­மித்த குழு, பாரா­ளு­மன்ற தெரி­விக்­குழு, எதிர்க்­கட்­சியின் குழு என பல்­வேறு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இச்­சம்­ப­வத்­திற்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்கள் யார்?

பதில்:- இந்த நாட்டின் பாது­காப்பு அமைச்­ச­ராக இருக்கும் ஜனா­தி­ப­தியே. அதற்கு அடுத்து பிர­தமர், பாது­காப்­புச்­சபை, பாது­காப்புச் செய­லாளர், பொலிஸ் மா அதிபர் என முழு பாது­காப்புக் கட்­ட­மைப்­பி­னரும் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­க­ளா­கின்­றனர். 2017ஆம் ஆண்­டி­லி­ருந்தே சஹ்ரான் குறித்த தக­வல்­களை முஸ்­லிம்­களே வழங்­கி­யுள்­ளார்கள். அவ­ருக்கு எதி­ராக 17 முறைப்­பா­டுகள் உள்­ளன. 2018இல் சஹ்­ரா­னுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வி­ன­ரி­டத்தில் முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ளது. 

மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் உடைப்பு சம்­பந்­த­மான விட­யத்தில் கபீர் ஹாசீமின் செய­லாளர் தஸ்லீம் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத­வி­ய­மைக்­காக அவர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது. பின்னர் வனாத்­த­வில்­லுவில் 75 ஏக்கர் தெங்கு தோட்­டத்தில் பாரிய தொகை வெடி­பொ­ருட்கள் எடுக்­கப்­பட்­டன. அடுத்து ஏப்ரல் 4, 11, 21காலையில் கூட எச்­ச­ரிக்­கைகள் இந்­தி­யாவால் விடுக்­கப்­பட்­டன. 

இப்­ப­டி­யி­ருக்­கையில், தன்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்­காக தற்­போது முஸ்­லிம்கள் மீது இன­ரீ­தி­யான செயற்­பா­டுகளை முன்­னெ­டுத்து அவ­தா­னத்­தினை திசை­தி­ருப்பும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்  பொறுப்­புக்­ கூ­ற­லி­லி­ருந்து தவிர்ந்து செல்­லவே முனை­கின்­றார்கள். 

கேள்வி:- இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் இலங்­கையின் நீதித்­துறை ஊடாக  நட­வ­டிக்­கைகள் எடுக்க முடி­யுமா?

பதில்:- தற்­போது நான்கு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஒரு சட்­டத்­த­ர­ணி­யான என்னால் அது­பற்றி கூற­மு­டி­யாது. எனினும் வழக்­கு­தொ­டுக்க முடியும். அதில் பிரச்­சி­னைகள் இல்லை.

கேள்வி:- தமி­ழினம் தனக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தி­க­ளுக்­கான சர்­வ­தேச சமூ­கத்தின் ஊடாக நீதியை எதிர்­பார்த்­தி­ருக்­கையில், முஸ்­லிம்­களும் தமக்கு அநீ­திகள் இழைக்­கப்­ப­டு­வ­தாக உணர்­கின்ற இத்­த­ரு­ணத்தில் உள்­நாட்டு நீதித்­துறை ஊடாக நீதி கிடைக்­கு­மென எதிர்­பார்க்க முடி­யுமா?

பதில்:- இலங்கை நீதித்­து­றையின் சுயா­தீனத் தன்­மையில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் நீதித் து­றையின் செயற்­றி­றனில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக வழக்­கொன்று தாக்கல் செய்தால் எவ்­வ­ளவு காலம் செல்லும், எவ்­வ­ளவு பணம் விர­ய­மாகும் போன்ற பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் தான் ஐ.நாவின் நீதித்­துறை செயற்­றிறன் குறித்த தரப்­ப­டுத்­த­லிலும் 184நாடு­களில் 144ஆவது இடத்தில் இருக்­கின்றோம்.  

அதே­நேரம், சிறு­பான்­மை­யி­ன­ராக இருப்­பதன் கார­ண­மாக எமக்கு நியாயம் கிடைக்­க­வில்லை என்ற மன­நி­லை­யொன்றும் இல்­லா­ம­லில்லை. சமஷ்டி பிரி­வினை அல்ல என்ற தீர்ப்பும் எமது நீதித்­து­றை­யினுள் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே  முழு­மை­யாக அவ்­வாறு கூற­மு­டி­யாது. 

கேள்வி:- முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் இரா­ஜி­னா­மாவை எப்­படி பார்க்­கின்­றீர்கள்? 

பதில்:- முஸ்லிம் பிர­தி­நி­திகள் அர­சி­லி­ருந்து வெளி­யே­று­வது ஆபத்­தான நிலை­மை­யொன்­றாகும். முன்­ன­தாக 1980முதல் 1983வரையில் அமிர்­த­லிங்கம் தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­டணி பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தது. ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரி­மையை நீக்­கி­னார்கள். ரோஹண விஜ­ய­வீர தலை­மை­யி­லான அணியை தடை செய்­தார்கள். இவ்­வாறு ஜன­நா­ய­கத்­தி­லி­ருந்து வில­கிச்­செல்­கின்ற முடி­வு­களை எடுக்­கின்­ற­போது ஜன­நா­ய­கத்தின் மீதான நம்­பிக்கை கேள்­விக்­குள்­ளா­கின்­றது. 

ஜன­நா­யக பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்­கான அங்­கீ­காரம் இல்­லாது போகின்­றது. அத்­த­கைய நிலை­மைகள் மிகவும் ஆபத்­தா­னவை. தற்­போது கூட, அத்­து­ர­லியே தேரரின் உண்­ணா­வி­ர­தமும், ஞானசாரதேரர் காலக்கெடுவும்  விதித்திருந்தார்கள். இதனால் மிகவும் இக்கட்டான நிலைமைகள் ஏற்பட்டதை அடுத்தே அவர்கள் பதவிகளிலிருந்து விலகினார்கள். அவர்கள் கூறும் காரணமும் நியாயமாகவுள்ளது. ஆனாலும் இனமொன்று சார்ந்த பிரதிநிதித்துவங்களின் அம்முடிவு ஜனநாயகத்தின் நம்பிக்கை குறித்து கேள்வியை ஏற்படுத்துகின்றது.

கேள்வி:- இலங்கை வரலாற்றில் பௌத்த மதத்தலைவர்களின் போக்குகளுக்கு ஆட்சியாளர்கள் கட்டுப்படுகின்ற நிலைமைகளும் நீடித்துவருகின்ற நிலையில் நீங்கள் வலியுறுத்தும் இலங்கையர் என்ற அடையாளத்தினை ஏற்படுத்துவது சாத்தியமாகுமா? 

பதில்:- அது மிகவும் சவாலான விடயமொன்றாகும். 1956 முதல், குண்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட 37பேரின் படுகொலைகள், யாழ். நூலகம் எரிப்பு, கறுப்பு ஜுலை இப்படியான பாரதூரமான சம்பவங்கள் தொடர்பில் ஒரு நபர் கூட இன்றுவரையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்டரீதி  யாக தண்டிக்கப்படவில்லை. அதேபோன்று  தான், அளுத்கம, திகண போன்ற சம்பவங்களில் எவ்விதமான சட்டரீதியான செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை.

சிங்கப்பூரிலும் இவ்விதமான பிரச்சினைகள் காணப்பட்டபோது லிகுவான்யூ அவற்றை  சரியாக இனம் கண்டிருந்தார். இனரீதியான விடயங்கள் வெளிவருவதற்கான சகல வழிகளையும் தடைசெய்து சட்டத்தின் ஆட்சியை வலுவாக நடைமுறைப்படுத்தினார். வன்முறைப்பேச்சுக்களை தடுத்தார். அதுமட்டுமன்றி, பல்லின நாட்டில்  இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்காது தவிர்த்து வந்தால் ஒரு நாளும் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் லிகுவான்யூ தெளிவாக கூறுவார். 

ஆகவே எந்த ஆட்சியாளர் ஆட்சிப்  பீடத்திற்கு வந்தாலும் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும். இலங்கையர்கள் என்பதன் அடிப்படையில் மதத்தலைவர்கள், சாதாரணமக்கள் பெரும்பான்மை, சிறுபான்மை இனத்தவர்கள் போன்ற வேறுபாடுகளின்றி சட்டம் ஒழுங்கை வலுவாக முன்னெடுக்க வேண்டும். இல்லாது விட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆகவே சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.