(நா.தனுஜா)

உலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா இலங்கை வருகை தந்துள்ளது.

இந்த அதி சொகுசு உல்லாசப்பயணக்கப்பல் வந்துள்ளமை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என உல்லாசப்பயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். 

எம்.எஸ்.யுரோப்பா எனும் இந்த அதிசொகுசு உல்லாசக்கப்பலின் வருகை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையில் இடம்பெற்ற அண்மைய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் வருகை தந்த முதலாவது வெளிநாட்டு உல்லாசப்பயணக்கப்பல் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது. 

அழகிய இலங்கை தீவிற்கு வருகை தர தீர்மானித்ததற்காக உல்லாசப்பயணிகள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.உங்கள் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜேர்மனைச் சேர்ந்த 900 உல்லாசப்பயணிகளுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்ற எம்.எஸ்.யுரோப்பா அதி சொகுசு உல்லாசப்பயண கப்பல் பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. 

கொழும்பு துறைமுகத்தில் இலங்கை உல்லாசப்பயண ஊக்குவிப்பு சபையினரால் வரவேற்கப்பட்ட ஜேர்மன் உல்லாசப்பயணிகள் பின்னர் கலாசார நிகழ்வுகளைக் கண்டு கழித்தனர்.

இலங்கை வருகை தந்த ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலபொட தேயிலை நிறுவனம்,அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா,கதிர்காமம் , எல்ல,சீகிரியா மற்றும் கண்டி உற்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.

இந்த உல்லாசப் பயணக்கப்பலுக்கு இலங்கையில் அட்கீன் பென்ஸ் தனியார் நிறுவனம் உபசரிப்பு முகவராகச் செயற்பட்டதோடு,எம்.எஸ்.யுரோப்பா உல்லாசக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து சென்றது.