தல அஜித் நடிப்பில் 60 ஆவது படமாக உருவாகும் பெயரிடப்படாத படத்தின் அவர் கார் பந்தய வீரராக நடிக்கிறார்.

திரை உலகில் நட்சத்திரமாக திகழ்வதற்கு முன்னரும் நட்சத்திரமாக ஜொலிக்கும் போதும் துவிச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பந்தயத்தில் பங்குபற்றி கார் பந்தய வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தல அஜித். இதன் காரணமாகவே அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. திரையில் அவர் நடித்தாலும், தன்னுடைய சுய விருப்பத்தால் கார் பந்தயங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் தல அஜித்.

இந்நிலையில் அவர் கார் பந்தய வீரராக அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. தற்போது அவரது நடிப்பில் தயாராகி ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகவிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெளியீட்டுக்கு பின்னர், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த பெயரிடாத படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கார் பந்தய வீரர் ஒருவரின் சுயசரிதையை தழுவி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்ப தாகவும், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே சமயத்தில் தயாராகவிருப்பதாகவும், இதன் மூலம் தல அஜித் ஹிந்தி திரையுலகில் கதையின் நாயகனாக நேரடியாக அறிமுகமாகிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் ஓகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும், படத்தினை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய இயக்குனரான ஹெச் வினோத் இயக்கவிருக்கிறார் என்பதும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தல அஜித், ஸ்ரத்த ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ ஓகஸ்ட் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.