அ.தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சேலத்தில் அவர்  தெரிவித்ததாவது, 

“மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் சேலத்தில் பாலம் கட்டப்படுகிறது. அரசு தனியாக எந்த பாலத்தையும் கட்டவில்லை. அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல். அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சி. அ.தி.மு.க. தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. அ.தி.மு.க. உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசியது குறித்த முழு விபரங்களை படித்துப் பார்த்த பிறகே பதில் அளிக்க முடியும்.” என்றார்.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, “ அ.தி.மு.க.வில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வில் தற்போது இரண்டு தலைமை இருக்கிறது. எனவே ஒரே தலைமையை உருவாக்குவது பற்றி அ.தி.மு.க. பொதுக் குழுவில் வலியுறுத்துவோம்.

ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது கட்சியில் இல்லை. இரண்டு தலைமை இருப்பதால் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியவில்லை. கட்சிக்குள் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கின்றன. தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற போது,

இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லாதது ஏன்?. அந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தியது யார்? ஏன்?. இரட்டை தலைமையினால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படும்.

நான் சொல்லும் கருத்துகள் கட்சியின் உட்பிரச்சினை அல்ல. கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை தீர்க்க வழி வகை காண வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வை தி.மு.க. வீழ்த்துவதற்கான வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவரே  தான் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரே தலைமை இருந்தால் தான் மக்களை ஈர்க்க முடியும்.” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.