(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளிநாட்டு அழுத்தத்திலே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.இதுதொடர்பாக புலனாய்வுத்துறை தேடிப்பார்க்கவேண்டும். அத்துடன் இவர்களின் பதவி விலகலின் மூலம் சாதாரண முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கும்  நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் உதய கம்மன்பில  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில்  உரையாற்றும்போதே  இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின்  பின்னர் எவரும் முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றஞ்சாட்டவில்லை.  முஸ்லிம் சமூகத்தை விரோதிகளாகப் பார்க்கவில்லை, ஆனால் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுங்கள் என்ற கோரிக்கையே வலுப்பெற்றது. 

ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான  விசாரணைகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக ஊடகங்கள்  மூலம் நாம் அறிந்துகொண்டோம். முஸ்லிம் அரசியல் வாதிகள் பயங்கரவாதிகளை பாதுகாக்கின்றனர். அவர்களை பலப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இதனால் முஸ்லிம் சமூகம் தொடர்பில் சந்தேகம்,வைராக்கியம் ஏற்பட்டது. இதனால் முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு மக்கள் வந்தனர் என அவர் இதன்போது தெரிவித்தார்.