(ப.பன்னீர்செல்வம்)

சிங்கள - பௌத்தவர்களின் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய அநகாரிக தர்மபால வேற்று மதங்களை விமர்சிக்கவோ கொச்சைப்படுத்தவோ இல்லை.  மாறாக சிங்கள பௌத்தவர்களே அவ்வாறு நடந்து கொண்டனர் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

2054 இல் அனைத்து மதங்களும் அழிந்துவிடும். பௌத்த தர்மமே கோலோச்சும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அநாகரிக தர்மாபாலவின் 83 ஆவது நினைவுதினம் இன்று வௌ்ளிக்கிழமை காலை கொழும்பு மருதானையிலுள்ள அநகாரி தர்மபால நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே   அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

எமது நாடு ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் சிக்கியிருந்த காலத்தில் டேவிட் சில்வா என்ற பாதிரியார் நாட்டுக்குள் மிஷனரிகளை வியாபிக்கச் செய்து பௌத்த தர்மத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்.  

பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் கிணற்றுத் தவளைகள் என விமர்சித்தார். இதன்போதே பாணந்துறை விவாதத்தை நடத்திய மீகெட்டுவத்தே குணாநந்த தேரர் பௌத்த தர்மத்தின் உயர்வை உலகப்  புகழ் பெறச் செய்தார். 

இதனோடு அநகாரிக தர்மபாலவும் சிங்கள பௌத்த எழுச்சியின் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் மதங்களை கொச்சைப்படுத்தவோ, விமர்சிக்கவோ இல்லை. மாறாக சிங்கள பௌத்த மக்களே இதனைச் செய்தனர். அவருடைய பேச்சுக்கள் கடுமையானதாக இருந்தன. 

கலாநிதி ஜோர்ஜ் பீரிஸ் மலலசேகர  ஒரு நிகழ்வில் வைத்து தர்மபாலவை விமர்சித்தார். ஜோர்ஜ் என்ற ஆங்கிலப் பெயரையும், பீரிஸ் என்ற போர்த்துகீச பெயரையும் வைத்துள்ளீரே வெட்கமில்லையா என பகிரங்கமாக விமர்சித்தார். இதன்பின்னரே மலலசேகர தனது முதல் பெயரை குணபால என சிங்களப் பெயராக மாற்றினார். 

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து சிங்கள பௌத்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். இன்று அதன் பலனாகவே சிங்கள பெயர்கள் நிலைத்து நிற்கின்றன.  பெளத்த தர்மம் தொடர்பாக சிங்களகோர டோள்கியோவில் தர்மபால ஆற்றிய உரைகள் தொடர்பாக இன்று வெ ளிநாடுகளில் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. 

புத்தர் பிறந்த புத்தகாயாவை இந்தியாவில் அன்று இந்துக்கள் பலாத்காரமாக கைப்பிடித்திருந்தனர். இதற்கு எதிராக இந்தியாவில் நீதிமன்றம் சென்று வழக்காடி அதனை மீட்டெடுத்து பௌத்தர்களுக்கு பெற்றுக் கொடுத்தார். 

இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் அநகாரிக தர்மபாலவின் பௌத்த கருதுக்களினால் ஈர்க்கப்பட்டு, பௌத்தத்தை தழுவியதோடு பல இந்தியர்களை பௌத்தர்களாக்கினார். உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் 2054 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும். 

ஆனால் பௌத்த தர்மம் கோலேச்சும் என மறைந்த விஞ்ஞானி ஆதர் சி கிளாக் தெரிவித்துள்ளார் என்றார்.