(ஆர்.சி, எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி இராஜிநாமாக்கள் ஸ்ரீகொத்தாவினால் அரங்கேற்றப்படும் நாடகமாகும்.அதனால் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை மதிப்பீட்டாளர்கள் நிருவாக திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

றிசாட் பதியுதீன் மீது நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அவரை இராஜினாமா செய்யவேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. இந்நிலையில் அவர் மட்டும் இராஜினாமா செய்தால் முஸ்லிம் மக்களின் தனிப்பெரும் தலைவராக அவர் மாறி விடுவார் என்ற அச்சத்திலேயே ஏனைய 8 முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப்பதவிகளை  இராஜினாமா செய்து நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்.

 இது ஸ்ரீகொத்தாவினால் அரங்கேற்றப்படும் நாடகமாகும்.

றிசாட் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும்போது அவருக்காக தமது அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்த ஏனைய 8 முஸ்லிம் அமைச்சர்களும் ரிசாட்டின்  குற்றங்களின் பொறுப்பை ஏற்க வேண்டிவரும் . 

அத்துடன் றிசாட் குற்றவாளியான பின்னர் இந்த 8 முஸ்லீம் அமைச்சர்களும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்கக்கூடாது. முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றுமையாக இருப்பதாக உலகிற்கு காட்ட  முற்படுகின்றனர். இது பிழையான முன்னுதாரணமாகுமென அவர் தனது உரையின் போது தெரிவித்தார்.