(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஜூலை மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெறுமென சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபைக்கு அறிவித்தார். 

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில்,

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் சிக்கல் நிலை இருந்து வருகின்றது. அதனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்து விட்டாரா இல்லையா என்பது தொடர்பில் குழப்பநிலை இருக்கின்றது. அதனால் அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அரசு எதனையும் தெரிவிக்காமல் இருக்கின்றது என்றார்.

இதன்போது எழுந்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல ,  றிசாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் எதுவும் தெரிவிக்காமல், ஜே .வி.பி.யினால் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜூலை மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்த திகதி குறிப்பிட்டிருக்கின்றோம் என்றார்.