‍ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெறும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியன்களான மேற்கிந்தியத்தீவுகளை நடப்பு சம்பியனான அவுஸ்திரேலிய எதிர்கொள்கிறது.

இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

ஆரோன் பிஞ்சத் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளினால் ஆப்கானிஸ்தானை எளிதில் தோற்கடித்தது. 

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் பிஞ்ச், வோர்னர், ஸ்மித், கவாஜா மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளதுடன் பந்து வீச்சிலும் பேட் கம்மின்ஸ், சம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எதிரணிக்கு சவால் விடக்கூடியவர்கள்

ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்த்தியத்தீவுகள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 13 ஓவரிலேயே பாகிஸ்தானின் கதையை  முடித்தது. அது மாத்திரமல்லாது பயிற்சிப் போட்டியிலும் நியூஸிலந்தை பந்தாடியது.

துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெய்ல், ஷெய் ஹோப், ரஸல் மற்றும் நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் எதிரணிக்கு தண்ணீ காட்டக் கூடியவர்கள். பந்து வீச்சில் உஷேன் தோமஸ் ஹோல்டர், ரஸல் போன்றோர் இருப்பது அணிக்கு பக்க பலமாகவுள்ளது.

ஓட்டங்களை குவிப்பதற்கு சாதகமான நோட்டிங்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளமையினால் அதிடிக்குப் பஞ்சம் இருக்காது.

உலகக் கிண்ண போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 09 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மேற்கிந்த்தியத்தீவுகள் அணி 05 போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி 04 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.