(செய்திப்பிரிவு)
இன்னெரு இனநெருக்கடியின் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று நாட்டின் அரசியல் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டிருக்கும் ஸ்ரீலங்கா தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களையும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அடுத்துத் தோன்றியிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசியல் வேறுபாடுகளிலிருந்து வெளிக்கிளம்பி தலைமைத்துவத்தை வழங்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை நேற்று புதன்கிழமை விரிவானதொரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன் முழு விபரம் வருமாறு :
2009 ஆம் ஆண்டில் முடிவிற்கு வந்த மூன்று தசாப்தகால இனப்போரின் இருளுக்குள்ளிருந்து வெளியில் வருவதற்கு இலங்கை இன்னமும் முயற்சித்த வண்ணமேயிருக்கிறது. இஸ்லாமிய அரசு இயக்கத்துடன் தொடர்புபடுத்தப்படும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களும், பொறுப்புவாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள் அந்தக் குண்டுத்தாக்குதல்களுக்கு வெளிக்காட்டுகின்ற பாதகமான பிரதிபலிப்புக்களும் எமது நாட்டை இன்னொரு இனநெருக்கடியின் திசையில் மீண்டும் கொண்டு செல்லக்கூடிய துரதிஷ்டவசமான நிலைமை தோன்றியிருக்கிறது. இலங்கை சமுதாயத்தில் பாரிய பிளவொன்றைத் தோற்றுவிப்பதற்கு குண்டுத்தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தவறான அபிப்பிராயங்களும், குரோத உணர்வுகளும், வெறுப்புப் பேச்சுக்களும் முன்னொருபோதுமில்லாத அளவிற்குத் தீவிரமடைந்துள்ளன.
முஸ்லிம் சமுதாயம் பரந்தளவில் இந்தக் குண்டுத்தாக்குதல்களுக்கு உடந்தையாக செயற்படுவதாகப் பல அரசியல்வாதிகளும், அரசியல் சமுதாயத்தின் உயர்மட்டங்களில் இருக்கும் கருத்துருவாக்கிகளும் பகிரங்கமாகவே கூறுகின்றார்கள். எமது நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வந்திருக்கின்ற பெருந்திரளான முஸ்லிம் சமுதாயத்துடன் தீவிரவாதிகளின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்களைத் தொடர்புபடுத்த முடியாது. தொடர்புபடுத்தவும் கூடாது. ஒரு முழுச்சமூகத்தையும் சந்தேகக்கண் கொண்டு இலக்குவைத்து நயவஞ்சகத்தனமாகவும், பகிரங்கமாகவும் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களை தேசிய சமாதானப் பேரவை கடுமையாகக் கண்டனம் செய்கிறது.
இந்தவகையான மனோபாவம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கவும், வைத்தியர்களாக இருப்பவர்கள் உட்பட முஸ்லிம்களுக்கு எதிராகத் தான்தோன்றித்தனமான குற்றச்சாட்டுக்களுக்கும் வழிவகுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் தமது பதவிகளை கூண்டோடு இராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த நிகழ்வுப்போக்குகள் எமக்குக் கவலை தருகின்றன. எந்தவித சான்றுகளும் இல்லாமல் தங்களுக்கும். முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராகச் சுமத்தப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் பற்றிய உண்மை நிலையை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினர் கண்டறிவதற்கு வசதி செய்யும் முகமாகவே தாங்கள் பதவிகளிலிருந்து விலகியதாக முஸ்லிம் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்காத அமைச்சரவையைக் கொண்ட ஓர் அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் விளங்குகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த பல வாரங்களாக எமது நாட்டைச் சூழ்ந்திருக்கும் அரசியல் இருளுக்குள் நம்பிக்கைப் பண்புகள், அஹிம்சை, சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்முகத்தன்மைக்கான மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பொதுவான எதிர்காலம் ஒன்றுக்கான எமது பாதைக்கு ஒளியூட்டக்கூடிய சுடர்களையும் நாம் காண்கின்றோம்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பிரதானமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினராக இருக்கும் கிறிஸ்தவ சமூகத்தைப் பொறுமை காக்க வைத்ததில் இலங்கைக் கத்தோலிக்கர்களின் தலைவரான கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழங்கப்பட்ட அஹிம்சை அடிப்படையிலானதும், வெறுப்புணர்வற்றதமான தலைமைத்துவம் முன்னுதாரணமானதாகும்.
குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தொலைவிலுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை அரசியல்வாதிகள் தூண்டிவிடும் வரை மூன்று வாரங்களாக குண்டுத்தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் எந்த வன்முறைத்தாக்குதல்களும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். அத்துரலியே ரத்ன தேரர் கண்டியில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திய நாட்களில் மக்களை அமைதியாக வைத்திருப்பதில் வணக்கத்திற்குரிய உயர்மட்ட பௌத்த குருமார் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்கைக் கவனத்திற்குக் கொண்டுவர நாம் விரும்புகின்றோம். அவர்கள் அவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவதிலான அரசாங்கத்தினதும், அவற்றைப் பாதுகாக்கும் பிரிவினரதும் முயற்சிகளை ஊறுபடுத்தக்கூடிய பாராதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், கும்பல்களின் வன்முறையும் சமூகம் முழுவதையும் பாதிப்பதற்கு அனுமதிக்காத வகையில் நெருக்கடியைக் கையாண்டதில் பாதுகாப்புப் படைகளின், குறிப்பாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க செயற்பட்ட விதம் மிகவும் மெச்சத்தக்கதாகும். பயங்கரவாத வன்முறையையும், தீவிரவாதத்தையும் தாங்கள் வெறுப்படைந்ததையும், அவற்றின் விளைவாக ஏற்பட்ட பாதிப்பக்களுக்காக தாங்கள் வருந்துவதையும் தங்களது சொல்லாலும், செயலாலும் வெளிக்காட்ட கடுமையாக முயற்சி;ததுக் கொண்டிருக்கும் பரந்தளவிலான முஸ்லிம் சமூகம் பயங்கரவாதக் கட்டமைப்புக்கள் துரிதமாக நிர்மூலம் செய்யப்பட்டு, பயங்கரவாதத்துடன் தொடர்புடையோர் கைது செய்யப்படுவதற்குத் தங்களது ஆதரவை வழங்கியிருக்கிறது.
தீவிரவாதத்தை அதன் சகல வகையான தோற்றப்பாடுகளிலும் எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கின்ற வேளையிலே முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றைய சமூகத்தவர்களைப் போன்று அவர்களது மனித உரிமைகளையும், கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான உரித்துடையவர்கள் என்பதை அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் அரசியல் தலைவர்கள் கருத்திலெடுக்க வேண்டுமென்று நாம் வலியுறுத்துகின்றோம்.
தங்களுக்கிடையில் இருக்கக்கூடிய கட்சி வேறுபாடுகளைக் கடந்து தற்போதைய நெருக்கடியிலிருந்து நாடு விடுபடுவத்றகு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் வெளிக்கிளம்பி தலைமைத்துவத்தை வழங்குமாறு எமது அரசியல் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM