ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவராம் மற்றும் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்கத்திடம் நீதி கோரியும் சிவராம் படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் மீடியா போரம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர் சேவை தொழிற்சங்க சம்மேளனம், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.