இந்தியாவில் வைத்தியத்துறையில் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்கு நுழைவுத்தேர்வாக இடம்பெறும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், மதிப்பெண் குறைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பத்தாம் வகுப்பில் 500 புள்ளிகளுக்கு 461 மதிப்பெண் எடுத்திருந்த இவர், பிளஸ் டூவில் 600 புள்ளிகளுக்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

வைத்தியராகும் கனவோடு நீட் தேர்வு எழுதிய குறித்த மாணவி, வெளியான முடிவுகளின் படி 68 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா என்ற மாணவியும், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த வருடம் அனிதா பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆயிரத்து 176 மதிப்பெண்களைப் பெற்றும், நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியாமல் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.