இந்தோனேசிய கடற்பரப்பில் சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று  மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 17 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு இந்தோனேசியாவுக்குச் சொந்தமான சுலவேசி தீவின் வடக்குப் பகுதியான பிட்டங்கிலிருந்து தெற்கிலுள்ள மொரோவலி பகுதிக்குச் சென்ற கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளது.

குறித்த கப்பல் கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளாகி மூழ்கிய போதும், 4 நாட்களாக மீட்புக் குழுவினர் தேடுதலை மேற்கொண்ட பின்னரே குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அதில் பயணம் செய்த ஒருவர் உயிர்தப்பிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். மீதியுள்ள 17 பேர் காணாமற் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுகுறித்து மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ”சரக்குக் கப்பலில் பயணம் செய்த 18 பேரும் காணாமல் போயினர். எனினும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டும் ஒரு தகவலும் கிடைத்தாத நிலையே நேற்று வரை தொடர்ந்தது.

இதனிடையே, நேற்று 35 வயதுமிக்க ஒருவர் உயிர்க்காப்பு அங்கியுடன் மிதந்துகொண்டிருந்த போது அவ்வழியே சென்ற கப்பல் மூலம் தெரியவந்தது.

அவர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலில் அவருடன் பயணம் செய்த மீதியுள்ள 17 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான சரக்குக் கப்பல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.

சிமெந்து ஏற்றிச்சென்ற இக்கப்பலின் இயந்திரப்பகுதி செயலிழந்ததன் காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சுமாத்திரா தீவில் அமைந்த உலகின் ஆழமான ஏரியொன்றில் இந்தோனேசியக் கப்பல் மூழ்கியபோது அதில் பயணம் செய்த 160 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.