இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 227 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 8 ஆவது லீக் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே சவுத்தம்டனில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்க ஆரம்ப வீரர்களாக அம்லா மற்றும் டீகொக் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தனர்.

நான்காவது ஓவருக்காக பும்ராவின் பந்து வீச்சினை எதிர்கொண்ட அம்லா அந்த ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ரேகித் சர்மாவிடம் பிடிகொடுத்து 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, 5.5 ஆவது ஓவரில் டீகொக்கும் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

3 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி மற்றும் வான்டெர் துஸ்சென் ஜோடி சேர்ந்து சற்று நேரம் தாக்குப் பிடிக்க தென்னாபிரிக்க அணி 14.1 ஓவரில் 50 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் வான்டெர் துஸ்சென் 12 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 20 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட சஹால் அந்த ஓவரின் முதலாவது பந்தில் வான்டெர் துஸ்செனை 22 ஓட்டத்துடனும், இறுதிப் பந்தில் 38 ஓட்டத்துடனும் டுப்பிளஸ்ஸியையும் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார்.

இதனால் தென்னாபிரக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்றது. இதன் பின்னர் களமிறங்கிய டூமினி 22.6 ஆவது ஓவரில் 3 ஓட்டத்துடனும் மில்லர் 35.3 ஆவது ஓவரில் 31 ஓட்டத்துடனும், ஆண்டில் பெஹல்குவே 39.3 ஆவது ஓவரில் 34 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் (158-7).

8 ஆவது விக்கெட்டுக்காக ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் களமிங்கி கைகோர்த்தாட தென்னாபிரிக்க அணி 45.5 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களை பெற்றதுடன், இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ரபாடா 31 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணிசார்பில் சஹால் 4 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Photo credit : ICC