(ஆர்.விதுஷா)

வாகன விபத்தக்களினால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை கடந்த  வருடத்தை விட குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. 

அதற்கமைய இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம்  வரையிலாக காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால்698 பேர்   உயிரிழந்துள்ளனர்.கடந்த வருடத்தில் இந்த காலப்குதியில் வாகன விபத்துக்களினால் 849 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 

அதற்கமைய கடந்த வருடத்தை விட  இவ்வருடத்தில் வாகன விபத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 இனால்  குறைவடைந்துள்ளதாக  குறிப்பிட்ட  வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தொடர்ந்து  கூறியதாவது,   

வாகன விபத்துக்களின் காரணமாக மூன்று மணித்தியாலத்திற்கு ஒருதடவை ஒருவர்  உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு  எட்டுப்பேர்  வரையில் வாகன விபத்துக்களினால்  உயிரிழக்க நேரிடுகின்றது. இத்தகைய  நிலையை  குறைத்து உயிரிழப்புக்களை குறைப்பதற்காக போக்குவரத்து  மற்றும்  சிவில் விமான  சேவைகள்  அமைச்சர்   அர்ஜூண  ரணதூங்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வீதி பாதுகாப்புக்கான  தேசிய  சபை நிறுவப்பட்டது.

இதனூடாக வீதி விபத்துக்ளை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில்  கடந்த  வருடத்துடன்  ஒப்பிடும் போது வாகன விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவடைந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.  

கடந்த  வருடத்தின் ஜனவரி மாதத்திற்கும்  மார்ச்  மாதத்திற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில்  வாகன விபத்துக்களின் காரணமாக  849 பேர்வரையில்  உயிரிழந்துள்ளனர். அவர்களில்  பாதசாரிகள்  243 பேரும்,மோட்டார் சைக்கில் ஓட்டுநர்கள் 294 பேரும், மோட்டார் சைக்கிளின்  பின்  இருக்கையில்  அமர்ந்து  பயணித்த  55 பேரும் உயிரிழந்தள்ளனர். 

மேலும்  68 சாரதிகள்,113 பயணிகள் மற்றும் சைக்கில ஓட்டுனர்கள் 75 பேர் உட்பட விபத்துக்களில் தொடர்புப்பட்ட உயிரிழப்பொன்றுடன் மொத்தமாக கடந்த வருடத்தில் முதலாம் காலாண்டில் 849 பேர்  வரையில் உயிரிழந்துள்ளனர். 

இருப்பினும்,இவ்வருடத்தின்  ஜனவரி  மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில்  வாகன  விபத்துக்களின்  காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது. 

அதற்கமைய இந்த வருடத்தின் முதல் மூன்று மாத்தில் 216 பாதசாரிகள் ,239 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள்,மோட்டார் சைக்கிளின்  பின்  இருக்கையில்  அமர்ந்து பயணித்த 40 பேர் , 51 சாரதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 96 பயணிகள் , 56 சைக்கில் ஓட்டுனர்களும்  உயிரிழந்துள்ளனர். 

மேற்படிடி தரவுகளை அவதானிக்கும் பொது மோட்டார் சைக்கில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.