இரண்டு இலட்ச மலையக மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. அதன் முதல் கட்டமாக, மலையக மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து இவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நேற்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

அதாவது, தோட்ட பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 47ஆவது விடயம்)

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல் வடமேல் மற்றும் தெற்கு போன்ற மாகாணங்களில் உள்ள தோட்டங்களுக்கு அருகாமையில் வாழும் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளின் கல்வி தேவை தோட்ட பாடசாலைகளினால் பூர்த்தி செய்யப்படுகின்றது. 

இருப்பினும் இப்பாடசாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமையின் காரணமாக இந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் பிரச்சினை நிலவுகின்றது. 

இதனால் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 300 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் தோட்டங்களுக்கு அருகாமையில் உள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட அடையாளங்காணப்பட்டுள்ள பாடசாலைகள், குறைந்த வசதிகள் அடையாளங்காணப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்களை சீர்செய்தல், வகுப்பறை வசதி, இயற்கை கழிவறை வசதி, குடிநீர் வசதி, பாடசாலை உபகரணங்களை விநியோகித்தல் ஊடாக இந்த பாடசாலை அபிவிருத்திக்கு திட்டம் வகுக்கப்படும். 

இதற்கமைவாக இதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டுவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.