மூன்றாவது மொழியை படிக்கச் சொல்வது மாணவர்களுக்கு பின் சுமையை கொடுக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

“ தமிழகத்தில் தற்பொழுது இருமொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. இதற்கு பதிலாக மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க பார்க்கிறது. ஏற்கெனவே மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை கற்கிறார்கள்.

மூன்றாவதாக ஒரு மொழியை கற்பது அவர்களுக்கு பரீட்சை சுமையை அதிகரிக்கும். தற்போது மூன்று மொழிகள் கற்பதால் எந்த பலனும் மாணவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. தேவைப்பட்டால் கல்லூரிப் படிப்புக்கு பின் எந்த மொழியை வேண்டுமானாலும் அவர்கள் கற்றுக் கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான நரசிம்மராவ் அவர்களுக்கு 16 மொழிகள் தெரியும். அவற்றை அவர் சுய விருப்பத்தின் பேரிலேயே கற்றுக்கொண்டார். தற்போது கூட சென்னையில் உள்ள ஹிந்தி பிரச்சார சபா மூலமாக 6 லட்சம் பேர் பரீட்சை எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற முறையில் மத்திய அரசு எதையும் திணிக்க கூடாது. திணிப்பு என்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது.” என்றார்.