ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 8 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் மோதவுள்ளன.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.

2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்து ஓய்விலிருந்த இந்திய அணி இன்று தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ளது.

இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்குவது இந்திய அணியின் எதிர்பார்ப்பாகவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும்,  தவானும் நிலைத்து நின்று வலுவான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். நடுத்தர வரிசையில் தாங்கிப்பிடிக்க  விராட் கோலி, லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அசத்துவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

பந்து வீச்சிலும் குல்தீப் யாதவ், சாஹல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களும் எதிரணிக்கு சவால் விடக்கூடியவர்கள் ஆவார்.

தென்னாபிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் 104 ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும், 2 வது ஆட்டத்தில் 21 ஓட்ட வித்தியாசத்தில் பங்களாதேஷிடமும் தோல்வி அடைந்தது. 

உலக கோப்பை வரலாற்றில் தென்னாபிரிக்க அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வரிசையாக தோற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். 

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தென்னாபிரிக்க அணியினர் சரிவில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்த இக் கட்டான தருணத்தில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயத்தால் உலக கோப்பை தொடரில் இருந்து விலகி விட்டார். தசைப்பிடிப்பால் அவதிப்படும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடியும் சில ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமையில் இருக்கிறார். 

இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் தங்களது வியூகங்களை மாற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதேவேளை இன்று மாலை 6.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள ஒன்பதாவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன.

பங்களாதேஷ் அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்துள்ளது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் இந்த ஆட்த்தில் இரு அணிகளும்  2 ஆவது வெற்றிக்காக போராடவுள்ளது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. அதில் நியூஸிலாந்து அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.