கனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு இடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம், பால்நிலை, சமத்துவம், உரிமை குறித்து இப் பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது 160 நாடுகளை சேர்ந்த 8000 பேர் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த பெண்கள் மாநாட்டில் 100000 வரையிலான பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர். கடந்த திங்கட்கிழமை 03ஆம் திகதி ஆரம்பமான இப் பெண்கள் மாநாடு நாளை(06)  நிறைவடைகின்றது. இவ் பெண்கள் மாநாட்டில் இலங்கைகையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார கலந்து சிறப்பிக்கின்றார்.

இப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், உலகத்தலைவர்கள், வழக்கறிஞர்கள், கல்வி மான்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், அறிவுசார் குழுக்கள், பெண்கள் உரிமை அமைப்புக்கள் உட்பட பலர் கலந்துக்கொள்கின்றனர்.கனடாவின் பெண்கள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கான அமைச்சர் மரியம் மொன்செவ் 20 நட்பு நாடுகளை சேர்ந்த அமைச்சர்களுடன் இணைந்து அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தை நடத்துகிறார். இதில் சுதேசிய தலைவர்களும் யுவதிகளும் பங்கேற்கின்றனர். பால்நிலை சமத்துவம், சுதேசிய மக்கள், அங்கவீனம்முற்றவர்கள், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் , சமூக அகதிகள் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்கள் என பலதரப்பட்ட பெண்கள் சிறுமியர் பற்றிய பிரச்சினைகள் இங்கு ஆராயப்படுகின்றன. 

இம் மாநாட்டில் இலங்கை அமைச்சர் சந்திராணி பண்டாரவுடன் இலங்கையை சேர்ந்த ஐ.நா இளைஞர் துதுவர் செல்வி ஜெயத்மா விக்கிரமநாயக்க, சமூக ஆர்வலர் செல்வி அனோக்க பிரிம்ரோஸ் உட்பட பல பெண் நலன்விரும்பிகள் கலந்துக்கொள்கின்றனர். 

பாலியல், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமை பால்நிலை ரீதியிலான வன்முறை பெண்கள் நல பொருளாதார உரிமை, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றி இப்பெண்கள் மாநாட்டில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

கனடாவும் இலங்கையும் பெண்கள் பொருளாதாரம் பால்நிலை சமத்துவம் பற்றி நெடுங்காலமாக ஆராய்ந்துவரும் மரபை கொண்டுள்ளன.

கனடா அமைச்சர் மொன்செவ் 21 புதிய பெண்கள் பற்றிய திட்டங்களை இம் மாநாட்டில் அறிவித்துள்ளார். அந்த குறிப்பிட்ட 21 திட்டங்களில் 02 திட்டங்கள் இலங்கைக்குறியது என்பது குறிப்பிடத்தக்கது.