அல்லாஹுதஆலாவின் அருளி னால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பிரதான பெருநாட்களில் முதல் பெருநாள் நோன்புப் பெருநாளாகும். 'ஈதுல் பித்ர்' எனும் இந்தப் புனிதப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத பெருநாளாக இருக்கிறது. இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வர். அதேபோல், தமது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் இல்லம் சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.
இதேவேளை, புனித பெருநாள் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான இனிய நாளில் புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை, போதனையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும்.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வாழ்க்கை முறைக்கான பயிற்சியை நோன்பு வழங்கியது. சரியான முறையில் நோன்பு நோற்றதன் மூலமாக இனிய குணம், கற்புடைமை, பொறுமை, நேர்மை, நன்நடத்தை, சகிப்புத் தன்மை, உளத் தூய்மை, வீரம், ஏழைகளின் துயரை உணரும் தன்மை, உதவும் மனப்பான்மை, மனித நேயம் என்பன போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒருவர் அடைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நற்பண்புகளை ஒரு முஸ்லிம் ஏனைய மாதங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான பயிற்சியே ரமழான் மாதமாகும். நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல, இனிவரும் நாட்களிலும் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பூரண ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும். தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை கௌவிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்பு காலங்களில் ஐவேளை தொழுகையோடு, சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வரவேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை அகன்று எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாக வாழ்வதற்காக ஐவேளை தொழுகையில் தொடர்ந்தும் பிரார்த்தனை புரிய வேண்டும்.
ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்பு காலங்களில் உதவியது போல், தொடர்ந்தும் உதவிகள் செய்து வரவேண்டும். ஸகாத், சதக்கா, போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸகாத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
இறையச்சம் எனும் ஆடை
நாங்கள் இன்று புத்தாடைகளை அணிந்து பெருநாள் கொண்டாடுகிறோம். இந்த ஆடைகள் ஒருநாள் பழைய ஆடைகளாகிவிடும். ஆனால் இறையச்சம் எனும் ஆடையை அணிவதன் மூலமாக உண்மையான பெருநாளைக் கொண்டாட முடியும். அந்த இறையச்ச ஆடையை புனித ரமழான் நோன்பு எமக்கு தருகிறது. இறை விருப்பத்தையும் அவனது நெருக்கத்தையும் அடையும் நோக்கில் நோன்பு நோற்றவர்களுக்கு அந்த ஆடை கிடைத்திருக்கும்.
சோதனையான காலகட்டத்தில் பெருநாள்
இந்த வருடம் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். புனித நோன்பை அச்சத்தின் மத்தியிலும் சோதனைகளின் மத்தியிலும் நோற்றுவிட்டு இன்று பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களின் பின்னர் வன்செயல்கள் இடம்பெற்ற இடங்களில் முஸ்லிம்கள் பலர் அகதிகளாகியுள்ளனர். பலர் வீடு வாசல்கள், சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். பலர் தொழில்களையும் வருமானங்களையும் இழந்துள்ளனர். பொதுவாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழும் நிலையில் இந்த வருடம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்துடனும் முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையிலும் இந்தப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
எனவே, புனித நோன்புப் பெருநாளை எல்லோரும் அவதானமாக கொண்டாட வேண்டும். சில ஊர்களில் பட்டாசு கொளுத்தும் வழக்கம் உள்ளது. அதனை முற்றாக நிறுத்த வேண்டும். எமது கொண்டாட்டங்கள் மற்றைய மதத்தினரை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. பெருநாள் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பிலும் ஊர் ஜமாஅத்தினர் முடிவெடுக்க வேண்டும்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிபடைத்தவர்கள் தாராளமாக உதவ வேண்டும். எமது ஆறுதல் வார்த்தைகள்கூட பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயங்களை சுகப்படுத்தும்.
இந்த பெருநாளை ஏனைய இனத்தவர்களுக்கு எமது கவலையையும் அனுதாபங்களையும் தெரிவிக்கும் வகையில் நல்லிணக்கப் பெருநாளாக கொண்டாட வேண்டும். அதற்கான பயிற்சியை ரமழான் நோன்பு எமக்களித்திருக்கிறது.
அத்துடன் முஸ்லிம்கள் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்தவர்களாக வாழவேண்டும். எமக்குள் பிளவுபட்டிருந்தால் என்றும் துன்பங்களையும் சோதனைகளையுமே சந்திக்க வேண்டி வரும் என்பதை உணரவேண்டும்.
'தக்பீர்' ஓசை இறை பள்ளிவாசல்களில் முழங்க, பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக. ஈத் முபாரக்!!
- எம். இஸட். ஷாஜஹான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM