அமெ­ரிக்கா உள்­ள­டங்­க­லான நாடு­களின்  இரா­ஜாங்க இர­க­சி­யங்­களை  கசியச் செய்ததன் மூலம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த விக்­கிலீக்ஸ் இணை­யத்­த­ளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­காத நிலையில் அவரை தடுத்து வைப்­ப­தற்கு விடுக்­கப்­பட்ட கோரிக் ­கையை  சுவீடன் நீதி­ப­தி­யொ­ருவர் நிரா­க­ரித்­துள்ளார்.

ஜூலியன் அஸேஞ்சை  பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­து­வது தொடர்பில் குழப்­ப­நிலை நில­வு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்கது.

ஜூலியன் அஸேஞ்  2010ஆம் ஆண்டில் தனக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட  பாலியல் வல்­லு­றவு  குற்­றச்­சாட்டு தொடர்பான  விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருக்­க­வில்லை எனக்கூறிய விசா­ர­ணை­யா­ளர்கள், அதனால் அவ­ருடன் தூர இருந்­த­வாறு விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்­தனர்.

இது அவர்­க­ளுக்கு  அவரை நாடு கடத்­து­வ­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க  அனு­ம­திக்கும் எனக் கூறப்­ப­டு­கி­றது.  ஜூலியன் அஸேஞ் ஏற்­க­னவே  பிரித்­தா­னி­யாவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில்  நீதி­பதி  விசா­ர­ணை­யா­ளர்­களின் கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்ளார்.

ஒருவர்  வெளிநாட்­டிலோ அன்றி தலை­ம­றை­வா­கவோ இருக்கும் பட்­சத்தில் அவர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­காத நிலையில்  அவரை தடுத்து வைக்க உத்­த­ர­வி­டு­வது  சுவீடன் நாட்டு சட்டப் பிர­காரம் சாதா­ரண நடை­மு­றை­யாகும். இந்த உத்­த­ர­வா­னது  ஐரோப்­பிய  கைது ஆணையை பிறப்­பித்து  அவரை சுவீ­ட­னுக்கு கொண்டு வரு­வ­தற்கு வழி­வ­கை­செய்யும்.

மேற்­படி தீர்ப்­பை­ய­டுத்து சுவீடன் பிரதி பொது விசா­ர­ணைகள் பணிப்­பாளர்  ஈவா பெர்ஸன் கூறு­கையில், ஜூலியன் அஸேஞ்­சிற்கு எதி­ரான பாலியல் குற்­றச்­சாட்டு வழக்கு விசா­ரணை தொடர்ந்து இடம்­பெறும் எனவும் தான் அஸேஞ்சை விசா­ரிக்க ஐரோப்­பிய விசா­ரணை உத்­த­ர­வொன்றை பிறப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.