எனது கட்சியிலிருந்து ஏகோபித்த வேண்டுகோள்  விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனது சிறுவயதில் நான் இலங்கையின் முதல் பிரதமர் டிஎஸ்சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு,அவர் பதவி ஆசைகளிற்கு அடிபணியாமல் நாட்டிற்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு என பயிற்சியளித்தார் என கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள் விடுக்கப்பட்டால்  நான் நாட்டிற்கான எனது கடமையை செய்வதற்கு தயார் என மாத்திரம் தெரிவித்தேன், எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நான் சுத்தமான கரங்களுடனேயே எனது அரசியலை ஆரம்பித்தேன்,அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நான் வகித்த பதவிகள் எவற்றிற்காகவும் நான் எவரினது ஆதரவை கோரியதில்லை, அந்த பதவிகள் தானாக என்னை வந்தடைந்தன எனவும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை,ஆனால் தேசத்தை கட்டியெழுப்பும் எந்த பதவிக்காகவும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும்போது பலர் எனது பெயரை குறிப்பிடுகின்றனர்,என தெரிவித்துள்ள சபாநாயகர் வேறு யாராவது கட்சியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் அவர்களிற்கு குறுக்கே நிற்கவிரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கட்சி ஐக்கியத்துடன் ஏகோபித்த முடிவையெடுத்தால் நான் அதனை ஏற்றுக்கொள்வேன் எனவும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.