(எம்.எப்.எம்.பஸீர், ஆர். யசி)

இலங்கையில் ஒரு சிறு குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி, இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த களரியை ஏற்படுத்த பதவி ஆசை பிடித்த சிலர் முயற்சின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 

அத்துடன் அதற்கு இடமளிக்காமல், சமாதானத்தை விரும்பும் இலங்கையர் என்ற ரீதியில்  நாம் எமது பதவிகளை இராஜினாமா செய்கின்றோம்.  அந்த பயங்கர்வாத தககுதல்களுடன் முச்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைகளுக்கு அவர்கள் தமது பதவிகள் ஊடாக இடையூறு ஏர்படுத்துவதாகவும் தொடர்ச்சியாக சிலர் குற்றம் சுமத்தி வந்த நிலையில் நாம் பதவிகளை துறந்துவிட்டோம்.  

எனவே  அந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மிக விரைவில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில்  சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாக  முஸ்லிம் அமைச்சர்கள்,  பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தாம் வகித்த பதவிகளில் இருந்து இன்று இராஜினாமா செய்த நிலையில் அதனை அறிவிக்கும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை அலரிமாளிகையில் நடத்தினர். 

இதன்போதே முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரவூப் ஹக்கீம்,  ஹலீம், ரிஷாத் பதியுதீன் , ஏ.எச்.எம். பெளஸி, ஹரீஸ், அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், பைசல் காசிம், முஜிபுர் ரஹ்மான், அமீர் அலி, தெளபீக், அலி சாஹிர் மெளலான, நஸீர் உள்ளிட்டவர்களுடன்  குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று  உரையாற்றும் போது கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.