அமெரிக்காவின் நாசா ஆய்வுமையம் விண்ணுக்கு அனுமப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயின் பரப்பில் களிமண் கனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

நாசா ஆய்வு மையம் கியூரியாசிட்டி எனும் விண்கலத்தை கடந்த மே 12ஆம் திகதி, செவ்வாய் கிரகத்தின் மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டுள்ளது.

இதையடுத்து துளையிட்ட குறித்த பகுதியை செல்ஃபி படமாக எடுத்து கியூரியாசிட்டி நாசாவிற்கு அனுப்பியுள்ளது. அது துளையிட்ட இடங்களில் களிமண் கனிமங்கள் அதிக அளவிலிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும். அந்த வகையில், பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி மேலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.