(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் இனமோதல்களுக்கு காரணமாக இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதி விடுவிக்க எடுத்த தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் விரோத பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்த பின்னர் இனவாதிகள் குருணாகல் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தி பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

என்றாலும் இனவாதிகள் நாடுபூராகவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தபோதும் பாதுகாப்பு தரப்பினர் அதனை தடுத்து நிறுத்தினர். இவ்வாறான நிலையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 19வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை பொது மன்னப்பின் அடிப்படையில் விடுதலைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்தார்.

ஆகவே முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் இனமோதல்களுக்கு காரணமாக இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதி விடுவிக்க எடுத்த தீர்மானம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் சிறையில் இருந்து வந்து சில தினங்களிலே மீண்டும் சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்திருக்கின்றார். ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும்போராட்டம் இடம்பெறும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அரசாங்கமும் அவர் சட்டத்தை கையில் எடுக்கும்வரையா பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று கேட்க விரும்புகின்றோம் என்றார்.