தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடவேண்டாம். இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால், ஜனநாயக வழியில் நின்று போராட தி.மு.க தயங்காது என அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின்  தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், டி ஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இந்தக் கூட்டத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால் எந்த நேரத்திலும் தி.மு.க எதிர்க்கும் ஜனநாயக வழியில் நின்று போராட தி.மு.க தயங்காது என மத்திய அரசுக்கு வேண்டுகோள் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இடைத் தேர்தலில் திமு.க தோல்வி அடைந்த தொகுதிகள், அதற்கான காரணங்கள் குறித்தும், நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

முன்னதாக கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று சென்னை கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். 

பின்னர் அண்ணா அறிவாலயத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் சிலைகளுக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.