அரசியல்வாதிகள் நாட்டு நலன் கருதி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறாமல் தமது வாய்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  தம்புள்ளை மாநகர சபையின் குப்பை மீள்சுழற்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்து நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி ஆகிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது.

எனினும் அவர்கள் இருவரும் தமது ஆளுநர் பதவியில் செயற்படும் விதத்தில் எந்தக் குறையையும் நான் காணவில்லை.

ஆளுநர் என்பவர் தான் சார்ந்த சமூகத்திற்கு மாத்திரமல்ல, முழு நாட்டுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் மற்றும் பெரிய புத்திசாலிகள் எனக் கூறும் நபர்கள் வெளியிடும் கருத்துக்கள் பெரிய ஆச்சரியத்தையும், விசனத்தையும் ஏற்படுத்துகிறது.

எனினும் மக்கள் என்றும் இல்லாத அளவுக்கு இப்பொழுது இந்த முட்டாள் அரசியல்வாதிகளை விட அறிவாளிகளாக இருக்கின்றனர். இதனால், மக்கள் குழம்பிக் கொள்வதில்லை.

அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பத்தில் தமது வாய்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வாயால் உண்ணும் உணவுகளால் சிலவேளை உடல் உபாதைகள் ஏற்படும். அதே வாயினால் வெளியிடும் வார்த்தைகளால் நாட்டிற்கும் சுகவீனம் ஏற்படும். இதனால், நாட்டு நலன் கருதி அரசியல்வாதிகள் தமது வாய்களைக் கவனமாக வைத்திருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அது யாவருக்கும் நலமானதாக இருக்கும்” என்றும் அவர் அறிவுரை பகிர்ந்துள்ளார்.

சமகாலத்தில் வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவின் இந்த சிந்தனைக்குரிய கருத்துக்கள் பல சமூக ஆர்வலர்களால் வரவேற்கப்பட்டு சிலாகித்துப் பேசப்படுகிறது.