12 ஆவது சர்வதேச கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டத்தினால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீம் 78 ஓட்டத்தையும், தமீம் இக்பால் 16 ஓட்டத்தையும், சஹிப் அல்ஹசன் 75 ஓட்டத்தையும் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இது இவ்வாறிருக்க கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி. 9 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 67 ஓட்டத்தினால் தென்னாபிரிக்கவை வீழ்த்தியது.

இதுவே முதன் முறையாக பங்களாதேஷ் அணி உலகக்கிண்ணத் தொடர் வரலாற்றில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய முதல் சந்தர்ப்பமாகும்.

இப் போட்டியின் போதும் நேற்றைய போட்டியில் ஆடிய தமீம் இக்பால், சஹிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹிம் மற்றும் மோர்டசா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

நேற்றைய வெற்றியின் மூலம் உலகக் கிண்ணத் தொடர்களில் இவ் விரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய நான்கு ஆட்டங்களில் தலா 2 போட்டிகள் வெற்றி என்ற நிலையுடன் சமநிலையில் உள்ளது.