(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு விடுத்திருந்த சுற்று நிரூபம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கடந்த மாதம் 29 ஆம் திகதி, அரசாங்கத்துக்கு கீழ் இருக்கும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் எனும் தலைப்பில் அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபம் ஒன்றை விடுத்திருந்தார்.

அதன் பிரகாரம் ஆண் உத்தியோகத்தர்கள்  காற்சட்டை, சேர்ட் அல்லது தேசிய ஆடை என்றும் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) மாத்திரமே அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்த சுற்று நிருபம் தொடர்பில் நான் உட்பட பலர் தெரிவித்துவந்த எதிர்ப்பு வெற்றியளித்திருக்கின்றது. 

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனையின் பிரகாரம் இந்த சுற்று நிருபம் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.