காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த மோகனராஜ் பிரியந்தினி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதி, தனது வீட்டிலிருந்து 27 ஆம் திகதி இரவு வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும், இது குறித்து 28 ஆம் திகதி காலை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் அடையாளம் காணப்பட்டு மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காதல் விவகாரம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக  யுவதியின் தாய் தெரிவித்தார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.