மலையகத்தில் இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது  குளவி கொட்டியதில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட்டவளை வெளிஓயா தோட்டத்தில், கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 12 பேரும், கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 9 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வட்டவளை வெளிஓயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் தொழிலாளி கர்ப்பிணி தாய் எனவும், பாதிக்கப்பட்ட 12 பேரும் பெண் தொழிலாளர்கள் எனவும், அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் 7 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும், இரண்டு பேர் ஆண் தொழிலாளர்கள் எனவும் தெரிவித்த வைத்தியசாலை வட்டாரங்கள், 9 பேரில் 4 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், இதில் ஒரு பெண் தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருந்ததன் காரணமாக குறித்த பெண் தொழிலாளியை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.