இந்தியா தும்மினால் இலங்கைக்கு காய்ச்சல் வரும் என்று கூறப்படுவதுண்டு. அந்தளவுக்கு இந்தியாவில் இடம்பெறும் நகர்வுகளின் தாக்கம் இலங்கையில் பிரதி பலிக்கும். அதன்படி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என வர்ணிக்கப்படும் இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் மத்தியில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதுடன் இரண்டாவது தடவையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
பாரதத்தில் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சியில் அமரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே 353 ஆசனங்களைப் பெற்று நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதுடன் தனிப்பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைத்துள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக பார்க்கப்படும் இந்தியாவின் அரசியல் நகர்வுகள், அதன் பூகோள அரசியல் செயற்பாடுகள் சுற்றியுள்ள தெற்காசிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எப்படியிருப்பினும் தற்போது மீண்டும் அமோக பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன் பல பொறுப்புகளும் சவால்களும் காத்துக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும். குறிப்பாக இலங்கையில் நீண்ட காலமாக நிலவும் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வகிபாகமும் பாரிய தார்மீக் கடமையும் காணப்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
கடந்த காலம் முழுவதும் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. தற்போது அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச் சட்டமும் இந்தியாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்டதாகும். எனவே இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும்.
வரலாறு முழுவதுமே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாரிய வலுவான சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. விஜயன் 700 தோழர்களுடன் வந்ததிலிருந்து இந்தத் தொடர்புகள் மேலும் வலுவடைந்திருக்கின்றன. இலங்கை மீது வரலாற்றில் பல படையெடுப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளே அதிகமானதாகவுள்ளன.
அதுமட்டுமன்றி இலங்கையும் இந்தியாவும் புவியியல் ரீதியாக ஓர் அலகாக இருந்தமைக்கான விஞ்ஞானபூர்வமான சான்றுகளும் காணப்படுகின்றன. பௌத்த மதமும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்தே வந்தது. அக்காலத்திலிருந்தே வலுவான பொருளாதாரத் தொடர்புகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்துள்ளன. காலனித்துவ ஆட்சியிலும் இலங்கையும் இந்தியாவும் ஓர் அலகாகவே நிர்வகிக்கப்பட்டன. அதன் பின்னர் 1823ஆம் ஆண்டிலிருந்து தென்னிந்தியத் தமிழர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். அவ்வாறு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் தொடர்புகள் வலுவானவையாகக் காணப்படுகின்றன.
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் வலுவானவையாகும். ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தியாவில் மிகப்பெரும் சுதந்திரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தளவுக்கு இலங்கையில் நிலைமை இருக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது இலங்கைக்கும் கிடைத்தது.
இதேவேளை இலங்கையின் தேசிய பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தீர்க்கமான தலையீடு இருந்து வந்துள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த திலிருந்தே நாட்டின் தமிழ் பேசும் மக் கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அரசி யல் தீர்வுத் திட்டம் ஒன்றைக் கோரி வருகின்றனர். கடந்த 70 வருட காலமாக இந்தக் கோரிக்கை இருந்துவருகின்றது. இதில் அவ்வப்போது இந்தியாவின் தலையீடு இருந்து வந்துள்ளது. 1980 களில் இலங்கை மேற்குலகின் பக்கம் சாய்வதாக உணர்ந்த இந்தியா வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு உதவியதாக வரலாறு உள்ளது. எப்படியும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்ற வகையில் இந்தியா பல முயற்சிகளை எடுத்துள்ளது என்பதே உண்மையாகும். 1987ஆம் ஆண்டு இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் ஒரு திருப்புமுனையாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனூடாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபை முறைமை இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட விடயமும் இரண்டு நாடுகளின் உறவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை அந்த மக்களுக்கு முழுமையான ஒரு தீர்வு கிடைக்காத நிலைமையே நீடித்து வருகின்றது.
இதற்கிடையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல்களும் ஏற்பட்டு மறைந்துள்ளன. எப்படியிருப்பினும் இலங்கை பொருளாதார ரீதியில் தனது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இந்தியாவுடனேயே செய்து கொண்டது. அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் வலுவடைந்தன.
மேலும் யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது அதற்கு இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது யுத்தத்தை முடிக்க உதவிய இந்தியா அதன் பின்னர் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அடைய காத்திரமான பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் யுத்தம் முடிந்த பின்னர் கடந்துபோன கடந்த 10 வருடங்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இக்காலப்பகுதியில் இலங்கை அரச பிரதிநிதிகளுடனும் தமிழ்த் தலைவர்களுடனும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதிலும் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு கள் எட்டப்படவில்லை.
மோடி அரசாங்கத்தின் கடந்த ஐந்து வருட காலப்பகுதியிலும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பல பேச்சுவார்த்தைகளை இந்திய அரசாங்கம் நடத்தியது. எனினும் இதுவரை ஆக்கபூர்வமான எந்த விடயமும் தீர்வு விடயத்தில் நடைபெறவில்லை.
இந்த நிலையிலேயே பிராந்தியத்தின் வல்லரசாகக் கருதப்படும் இந்தியாவில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந் துள்ளது. அதாவது சர்வதேசப் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், அதன் கசப்பான அனுபவம் இலங்கையைப் பாதித்துள்ள நிலையில் தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசு என பார்க்கப்படும் இந்தியாவில் தனிப்பெரும்பான்மைப் பலத்துடன் மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்தப் பின்னணியில் இனி தமிழர் பிரச்சினை தீர்வு விடயத்திலும் மலையக மக்களின் சமூக முன்னேற்ற விடயத்திலும் இந்தியா என்ன செய்யப்போகின்றது? எவ்வாறான அணுகுமுறைகளை எடுக்கப்போகின்றது என்பதே தற்போது அனைவர் மத்தியிலும் காணப்படுகின்ற கேள்வியாகும். குறிப்பாக இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு இந்தியா எவ்வாறான பங்களிப்பை வழங்கப்போகின்றது? எவ்வாறான வகிபாகத்தை வகிக்கப்போகின்றது என்பவை தொடர்பில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மலையக மக்களின் சமூக மேம்பாட்டு விடயத்திலும் இந்தியா உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய நம்பிக்கையை வைத்துள்ள னர். இந்தியா இந்த விடயத்தில் தலையிட்டு தமக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தரும் என்று தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியா இலங்கை விடயத்தில் நேரடியாக தீர்வு விடயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கின்றது. இலங்கை அரசாங்கமும் இந்தியா எமது உள்நாட்டு விடயங்களில் நேரடித் தலையீட்டை செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் ஆக்கபூர்வமான வகிபாகம் ஒன்று உள்ளது என்பதை இலங்கை அர சியல்வாதிகள் ஏற்றுக்கொள்கின்றனர். அதனை யாரும் முழுமையாக மறுத்து விடவில்லை.
கடந்த ஐந்து வருட காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரச தப்புடனும் பேச்சு நடத்தினார். ஆனால் இக்காலப் பகுதியில் அரசியல் தீர்வு விடயத்தில் எவ்விதமான முன்னேற்றங்களும் இடம்பெறவில்லை.
இந்தச் சூழலில் இந்தியா எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத் தில் என்ன செய்யப்போகின்றது என்பது குறித்து தமிழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா உதவி வழங்கியது. இதனை முன்னைய அரசாங்கமே பல தடவைகள் கூறியிருக்கின்றது. அவ்வாறான நிலையில் இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான, நிரந்தரமான தீர்வைக்காண முழுமையான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. மோடி வெற்றிபெற்றதும் வாழ்த்துத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது நரேந்திர மோடியுடன் மிகவும் நெருக்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருக்கின்றோம். எதிர்வரும் ஆண்டுகளில் தங்களது தலைமைத்துவத்தின் கீழ் பல மைல் கற்களை நீங்களும் இந்திய மக்களும் அடைய நாம் பிரார்த்தனை செய்கிறோம். இத்தருணத்தில் இலங்கை மக்களுக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு, தங்களது அரசும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்தும் வருங்காலங்களில், இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிறைவான, நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான, ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் முகமாகவும், தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்டும் முகமாகவும் மிக நெருங்கிச் செயலாற்ற ஆவலாக உள்ளோம். மீண்டுமொரு முறை தமிழ் பேசும் மக்களின் சார்பில், உயரிய பதவியில் நீங்கள் திறம்பட செயலாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சம்பந்தன் அதில் தெரிவித்திருந்தார். இதன்படி இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் எத்தகைய எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதை உணர முடிகின்றது. அதனை இந்தியா உணர்ந்துகொள்ளவேண்டும்.
மிக நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் இதுவரை அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தியாவின் தலையீட்டில் ஒரு கட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வும் இன்று முழுமையடையவில்லை. எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது வகிபாகத்தை உணர்ந்து செயற்படும் என்று மக்கள் நம்புகின்றனர். இது சவாலான விடயமாகும். இந்த விடயத்தில் நரேந்திர மோடி பல சவால்களையும் சமாளித்துச் செயற்பட வேண்டியிருக்கின்றது.
அதேபோன்று மலையக மக்களும் இந்தியா தமது சமூக மேம்பாட்டுக்கு உதவும் என எதிர்பார்க்கின்றனர். வீட மைப்பு விடயத்தில் இந்தியா ஏற்கனவே உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால் மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் இந்தியா உதவ வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இது தொடர்பில் பேராசிரியர் ஒருவர் எம்முடன் கருத்துப் பகிர்கையில்,
இலங்கையிலுள்ள மலையக சமூகத் துக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் 4000 மாணவர்கள் அளவில் உயர் கல்வி கற்பதற்கு தகுதி பெறாமல் தொழில்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு இந்தியாவில் தொழிற்பயிற்சி வழங்க முடியும் என்றால் அது பாரிய விடயமாக அமையும். குறிப்பாக தொழில்நுட்பக் கல்வியில் பாரிய ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்.
அந்தவகையில் இலங்கை விடயத் தில் இந்தியாவின் பங்களிப்பு மிக வும் முக்கியத்துவமிக்கதாகவே அமைந்துள்ளது. அந்தப் பங்களிப்பு அல்லது வகிபாகம் உரிய முறையில் அமைய வேண்டும். தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியமைக்கும் மோடியின் அரசாங்கத்தின் மீது இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பாரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கின்றனர் என்பதே யதார்த்தமாகும். அதனைப் புரிந்து பிராந்திய வல்லரசு செயற்படுமா? பார்க்கலாம்.
ரொபட் அன்டனி















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM