இலங்­கையில் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தின் ஊடு­ரு­வ­லா­னது பல்­வேறு அதி­ருப்தி நிலை­களை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது. சமா­தா­னமும் நல்­லி­ணக்­கமும் சீர்­கு­லைந்­தி­ருக்­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தா­ரம் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றது. இவற்­றுக்கும் மத்­தியில் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­ தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள் ளது. இந்­நி­லையில் சிங்­கள பௌத்த மக்­க­ளி­டையே ஐக்­கியம் மிக்க தன்மை மேலெ­ழுந்து வரு­வ­த­னையும் காண­மு­டி­கின்­றது. இன ரீதியில் ஒன்­று­பட்டு நாட்டின் சவால்­களை வெற்­றி­கொள்ள அவர்கள் முனைந்து வரு­கின்­றார்கள். இந்த ஒன்­றி­ணைவு நிலை­மை­யா­னது சிறு­பான்மை மக்­களின் எதிர்­கா­லத்தில் பல்­வேறு சவால்­க­ளையும் எதிர்­கொள்ள உந்து சக்­தி­யாக அமையும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது. சிறு­பான்மை மக்­களின் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தோடு ஆளுமை இல்­லாத நிலைக்கு அவர்கள் தள்­ளப்­ப­டக்­கூ­டிய அபாயம் மேலெ­ழும்பக் கூடு­மென்றும் புத்தி ஜீவிகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். பின் தங்­கிய ஒரு நிலையில் இருந்து படிப்­ப­டி­யாக மேலெ­ழும்பி வரும் மலை­யக சமூ­கத்­திற்கு இது மிகுந்த பேரி­டி­யாக அமையும் என்னும் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்பு அதிர்ச்­சியில் இருந்து நாடு இன்னும் முழு­மை­யாக மீள­வில்லை. இன்னும் அச்ச நிலை­மைகள் மக்­களின் மனங்­களில் குடி­கொண்­டி­ருக்­கின்­றன. குண்­டு­வெ­டிப்­பினை தொடர்ந்து நாட்டில் பல்­வேறு சிக்­கல்­களும் மேலெ­ழுந்­த­மையும் நீங்கள் அறிந்த விட­ய­மாகும். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இக்­குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு பொறுப்­பேற்­றி­ருந்த நிலையில் நாட்டின் பாது­காப்பில் காணப்­பட்ட ஓட்­டைகள் அர­சியல் முரண்­பா­டுகள் உள்­ளிட்ட கார­ணிகள் சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் நாட்டில் ஊடு­ரு­வு­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமைந்­த­தாக கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன. நாடு எதிர்­கொண்ட பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் முழு­மை­யாக நீக்­கப்­பட்டு விட்­ட­தாக செய்­திகள் வலி­யு­றுத்­து­கின்­ற­போதும் மக்கள் இதனை முற்­றாக ஏற்­றுக்­கொள்­வ­தாக இல்லை. மீண்டும் நாட்டில் தீவி­ர­வாத நட­வ­டிக்­கைகள் தலை தூக்­கக்­கூடும். எனவே விழிப்­பாக இருக்க வேண்டும் என்றும் சிலர் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். இத­னி­டையே குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்று ஒரு மாதம் கடந்­துள்ள நிலையில் தாக்­கு­தல்­களின் பின்னர் ஜனா­தி­ப­தியும் பாது­காப்பு அமைச்­ச­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன விரைந்து மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் முழு­மை­யாக நிர்­மூலம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதன் பின்னர் மீண்டும் ஒரு தாக்­குதல் இடம்­பெ­றாமல் தடுக்க முடிந்­தமை பாரி­ய­தொரு வெற்­றி­யாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பெருமை பேசி இருக்­கின்­றது.

குண்டு வெடிப்பு சம்­ப­வத்தை தொடர்ந்து இந்­நாட்டில் விஷ­மிகள் முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் நடாத்தி இருந்­தனர். இதனை பலரும் கண்­டித்துப் பேசி இருந்­தனர். சிங்­கள – முஸ்லிம் உற­வுகள் இதனால் விரி­ச­ல­டைந்­தன.  முஸ்­லிம்கள் மீதான சந்­தேகப் பார்­வையும் வலுப்­பெற்­றது. இந்­நி­லையில் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருக்­கின்ற அவ­நம்­பிக்­கையை போக்­கு­வ­தற்கு முறை­யான கலந்­து­ரை­யாடல் ஒன்று அவ­சி­ய­மென்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி இருந்­தனர். முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஆயு­தங்கள் இருக்­கலாம் என்று சிங்­க­ள­வர்­க­ளி­டையே சந்­தேகம் நில­வு­கின்­றது. இதனால் அவர்கள் அச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள். இந்­நி­லையில் சிங்­கள மக்­களின் சந்­தே­கத்தை போக்கும் வகை­யிலும் முஸ்­லிம்­களின் கௌர­வத்­திற்கு பாதிப்­பற்­றதும் இடை­யூறு ஏற்­ப­டுத்­தாத வகை­யிலும் முறை­யான திட்­ட­மிட்ட பாது­காப்பு வேலைத்­திட்டம் ஒன்­றினை கட்­ட­மைக்­கு­மாறு பாது­காப்பு பிரி­வி­ன­ரிடம் கோரிக்கை ஒன்­றி­னையும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி முன்­வைத்­தி­ருந்­தது.

ஞான­சார தேரரின் விடு­தலை

நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச்செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கடந்த வியா­ழக்­கி­ழமை (23) அன்று விடு­தலை செய்­யப்­பட்டார். ஜனா­தி­ப­தியின் பொது­மன்­னிப்பு கார­ண­மாக இவ­ருக்கு விடு­தலை கிடைத்­தது. எனினும் இவ­ரது விடு­தலை குறித்து அநே­க­மான பெரும்­பான்மை மக்கள் மகிழ்ச்சி தெரி­வித்­துள்ள நிலையில் இன்னும் ஒரு சிலர் கண்­ட­னங்­களை தெரி­வித்து வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கி­யமை ஒரு­த­லைப்­பட்­ச­மான செயற்­பாடு என்று லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி குற்றம் சாட்டி இருக்­கின்­றது. ஜனா­தி­ப­திக்கு அர­சி­ய­ல­மைப்பின்படி பொது­மன்­னிப்பு வழங்கும் அதி­காரம் காணப்­ப­டலாம். ஆனால் அதனை முறை­யாக செயற்­ப­டுத்தி இருக்க வேண்டும். இவ­ரது விடு­த­லை­யினைத் தொடர்ந்து மறு­புறம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நீதித்­து­றை­யினை நம்­பும்­போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மென்றும் சம­ச­மாஜக் கட்சி தெரி­வித்­துள்­ள­மையும் நோக்­கத்­தக்­க­தா­கவே உள்­ளது.

இது போன்றே இன்னும் சிலரும் ஞான­சார தேரர் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக குர­லெ­ழுப்பி இருக்­கின்­றனர். ஊட­க­வி­யலாளர் பிரகீத் எக்­ன­ லி­கொ­டவின் மனைவி சந்­தி­யாவும் இதில் ஒரு­வ­ராவார். ஞான­சா­ரரின் விடு­த­லையால் தனக்கும் குடும்­பத்­துக்கும் உயிர் அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும் உரிய பாது­காப்­பினை வழங்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு இவர் கடிதம் ஒன்­றி­னையும் அனுப்பி வைத்­தி­ருந்தார். இதே­வேளை ஞான­சார தேரரை விடு­தலை செய்­துள்ள நிலையில் அர­சியல் கைதி­களின் விடு­த­லை­யையும் ஜனா­தி­பதி துரி­தப்­ப­டுத்த வேண்டும் என்று கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஞான­சார தேரரின் விடு­தலை முஸ்லிம் மக்­க­ளி­டையே பல்­வேறு அதிர்­வ­லை­களை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. இத­னி­டையே ஞான­சார தேரர் அர­சி­யல்­வா­தி­களின் செயற்­பா­டு­களை வன்­மை­யாகக் கண்­டித்து பேசி வரு­கின்றார். அர­சி­யல்­வா­தி­களின் முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டுகள் பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் எனவே அர­சி­யல்­வா­திகள் அநா­வ­சி­ய­மான பிர­சா­ரங்­களை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். அர­சியல் இலாபம் தேட முயற்­சிப்­ப­வர்­களை கண்­டித்­துள்ள தேரர் அனைத்து தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண­வேண்டும் என்றும் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தற்கு சிறந்­த­தொரு தலை­மைத்­து­வத்தின் அவ­சி­யத்­தினை வலி­யு­றுத்­தி­யுள்ள அவர் தலைவர் இல்­லாமல் போகும் போதும் தலை­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் போதும்தான், நாடு சீர­ழி­கின்­றது என்­ப­தையும் நினை­வு­ப­டுத்தி இருக்­கின்றார்.

ஞான­சார தேரரின் வருகை சிங்­கள பௌத்­தர்­க­ளி­டையே மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. தேரர் ஏற்­க­னவே எச்­ச­ரிக்கை விடுத்து தெரி­வித்த கருத்­துக்­களை இப்­போது அம்­மக்கள் சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர். எனினும் நான் ஏற்­க­னவே கூறி­யது போன்று முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரி­டையே ஒரு அச்ச உணர்வு மேலோங்கி காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் நாட்டை முன்­னேற்­று­வ­தற்கும் நாட்டு மக்­களை வழி­ந­டத்­து­வ­தற்கும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­கான தேசிய ரீதி­யி­லான நல்ல நோக்­கத்தைக் கொண்­ட­தாக ஒரு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டி­ருந்தால் அதனை மக்கள் வர­வேற்­றி­ருப்­பார்கள் என்று தெரி­வித்­துள்ள புத்தி ஜீவிகள் ஞான­சார தேர­ருக்கு அளிக்­கப்­பட்ட பொது மன்­னிப்­பா­னது இன ஐக்­கி­யத்­திற்கும் நல்­லி­ணக்­ கத்­திற்கும் விடுக்­கப்­பட்ட பாரிய சவால் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இத­னோடு ஒப்­பி­டு­கையில் ஞான­சார தேரர் வெளிப்­ப­டுத்தும் சில கருத்­துக்கள் தொடர்பில் ஆழ­மா­கவே சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

சிங்­கள பௌத்தர் ஒன்­றி­ணைவு 

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்­பு­களை தொடர்ந்து சிங்­கள பௌத்­தர்­க­ளி­டையே ஒரு இணைந்த ஐக்­கியம் மிக்க போக்கு காணப்­ப­டு­வ­தனை எம் மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. சிங்­கள பௌத்த ஒன்­றி­ணைவு இந்த நாட்டை பயங்­க­ர­வா­தி­க­ளிடம் இருந்தும் அந்­நி­யர்­க­ளிடம் இருந்தும் மீட்­டெ­டுக்க உந்து சக்­தி­யாக அமையும் என எண்ணம் வலுப்­பெற்று காணப்­ப­டு­கின்­றது. அந்நி­ய தலை­யீ­டுகள் நாட்டில் அதி­க­ரித்து வரு­கின்­றமை குறித்து அதி­ருப்தி தெரி­வித்­துள்ள சில சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு இடை­யி­லான விரிசல் நாட்டை அதள பாதா­ளத்­திற்கு கொண்டு சென்று விடும் என்று எச்­ச­ரிக்கை விடுத்து வரு­கின்­றனர். இதே­வேளை நாட்டின் அர­சியல் நில­வ­ரங்கள் தொடர்­பிலும் விமர்­ச­னங்கள் பலவும் இருந்து வரு­கின்­றன. சிறு­பான்­மை­யி­னரின் தயவு இல்­லாத அர­சியல் பலத்தை உரு­வாக்க வேண்டும். சிங்­கள பௌத்­தர்கள் இது குறித்து சிந்­தித்து செயற்­பட வேண்டும் என்­றெல்லாம் கருத்­துக்கள் வெளிப்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­கவே உள்­ளது. எவ்­வா­றெ­னினும் அடுத்து வரும் தேர்­தல்­களில் சிங்­கள பௌத்­தர்­க­ளி­டையே ஒரு­மித்த ஐக்­கியம் மிக்க போக்கு காணப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மை­யா­னது சிறு­பான்­மை­யி­னரை பொறுத்த வரையில் அதிலும் மலை­யக மக்­களை பொறுத்­த­வ­ரையில் பெரு­ம­ள­வி­லான பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது.

சிங்­கள பௌத்­தர்கள் தற்­போது ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, பொது­ஜன பெர­முன மற்றும் ஜே.வி.பி. உள்­ளிட்ட பல கட்­சி­களில் அங்கம் வகிக்­கின்­றனர். இது சிறு­பான்­மை­யி­னரை பொறுத்­த­வ­ரையில் ஒரு சாதக நிலை­மை­யே­யாகும். இதனால் சிறு­பான்­மை­யினர் சில சந்­தர்ப்­பங்­களில் ஆதிக்கம் செலுத்­தக்­கூ­டிய ஒரு நிலை மேலோங்கி காணப்­பட்­டது. எனினும் பெரும்­பான்மை மக்கள் சம­கால சவால்­களை வெற்றி கொள்­வதை கருத்தில் கொண்டு ஒரு கட்­சியை பலப்­ப­டுத்த முனைந்து ஐக்­கி­யப்­ப­டுத்­து­மி­டத்து சிறு­பான்­மை­யினர் செல்­லாக்­கா­சாகும் வாய்ப்­புள்­ளது.

ஒரு காலத்தில் இலங்கை அர­சி­யலில் அமரர் தொண்­டமான் ‘கிங் மேக்­க­ராக’ விளங்­கினார். பேரம் பேசும் சக்­தி­யினை மையப்­ப­டுத்தி மலை­யக மக்கள் உரி­மை­களை பெற்றுக் கொள்ள வழி­வ­குத்தார். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சி­களின் ஆதிக்­கமும் பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் வலுப்­பெற்று காணப்­பட்­டது. சிறு­பான்­மை­யி­னரின் எழுச்சி பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­களின் கண்­களை உறுத்தி இருந்­தது. இது பல்­வேறு பாதக விளை­வு­க­ளுக்கும் வித்­திட்­டது.

விரும்­பத்­த­காத நிகழ்­வுகள்

பெரும்­பான்மை சொல்­வ­தனை கேட்­டுக்­கொண்டு இந்­நாட்டில் சிறு­பான்­மை­யினர் அடங்கி நடக்க வேண்டும். உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்­கக்­கூ­டாது. அவ்­வாறு சிறு­பான்­மை­யினர் குரல் கொடுப்­பார்­க­ளாக இருந்தால் நாங்கள் வேறு­வி­த­மாக நடந்து கொள்ள வேண்டி வரும் என்­பது பேரி­ன­வா­தி­களின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது. ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடி­மைப்­ப­டுத்த முடி­யாது. அவ்­வாறு அடங்கி நடக்க வேண்­டிய அவ­சி­யமும் கிடை­யாது என்­றெல்லாம் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­ற­போதும் இவை­யெல்லாம் பேரி­ன­வா­தி­களின் செவி­களில் ஏறு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு தெரிந்­த­தெல்லாம் அடக்­கு­முறை, ஒடுக்­கு­முறை, உரிமை மறுப்பு என்­பது மட்டும்தான். இத­ன­டிப்­ப­டையில் சிறு­ பான்­மை­யினர் மேலெ­ழும்பும் போதெல் லாம் பேரி­ன­வா­தி­களின் செயற்­பாடு விரும்­பத்­த­காத முறையில் அமைந்­தி­ருந்­ தது.

இந்­திய வம்­சா­வளி மக்கள் அர­சி­யலில் கோலோச்சி விடுவர் என்­கிற பயம் அம்­மக்­களின் பிர­ஜா­வு­ரிமை, வாக்­கு­ரிமை என்­ப­வற்றை இன­வா­திகள் பறித்­தெ­டுக்க உந்­து­சக்­தி­யா­னது. இதனால் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் கூட மறைந்­த­பா­டில்லை. 1956 ஆம் ஆண்டின் தனிச்­சிங்­கள சட்டம் இந்­நாட்டின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு மேலும் ஒரு அடி­யாக அமைந்­தது. தனிச் சிங்­கள சட்டம் என்னும் கொள்கை இந்த நாட்டின் பொது வாழ்க்­கையில் தமிழ் மொழியை அதற்­கு­ரிய ஸ்தானத்தில் இருந்து வெறு­மனே விலக்கி வைப்­பதை மட்டும் கரு­த­வில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்­களை இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம் மற்றும் கலா­சார வாழ்க்கை என்­ப­வற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்­கின்­றது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அ.அமிர்­த­லிங்கம் (1964) தெரி­வித்­தி­ருந்­தமை நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது. பெரும்­பான்­மையை திருப்­திப்­ப­டுத்தும் கலா­சாரம் இலங்­கையில் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை மறு­த­லித்­தது. பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரை பகைத்­துக்­கொள்ள விரும்­பாத அர­சி­யல்­வா­திகள் தான் செய்­வது பிழை­யென்று தெரிந்தும் பெரும்­பான்­மை­யி­னரை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் தமது அர­சியல் இருப்­பினை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கா­கவும் சிலர் பிழை­யான செயல்­களை தொடர்ச்­சி­யாக செய்து கொண்­டி­ருந்­தனர்.

1956 ஆம் ஆண்டில் தனிச்­சிங்­கள சட்டம் கொண்டு வரப்­பட்­டதை ஆரம்­பத்தில் எதிர்த்த அர­சி­யல்­வா­திகள் கூட பெரும்­பான்­மை­யி­னரை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக பின்னர் தனது நிலையை மாற்­றிக்­கொண்டு இச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக இருந்­தனர். இந்­நாட்டில் இடம்­பெற்ற வன்­செ­யல்கள் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை ஒடுக்­கு­வ­தாக இருந்­தன. முஸ்லிம் சமூ­கத்­தி­னரை வர்த்­தக ரீதியில் முடக்­கு­வது இன­வா­தி­களின் திட்­ட­மிட்ட நடை­மு­றை­களில் ஒன்­றாகும் என்­பதும் சொல்லித் தெரி­ய­வேண்­டிய விட­ய­மல்ல. இன­வா­தி­களின் கொடு­மை­களை சிறு­பான்மை மக்கள் சகித்துக் கொண்ட வர­லா­றுகள் இலங்­கையில் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. காலத்­துக்கு காலம் திசை மாறும் இன­வாதம் சிறு­பான்மை இனம் ஒவ்­வொன்­றையும் பட்­டியல் முறைப்­படி குறி­வைக்­கின்­றது. இந்த வர­லாறு என்று ஓயப்­போ­கின்­றது என்று தெரி­ய­வில்லை.

பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா போன்ற பல நாடு­களில் பெரும்­பான்மை, சிறு­பான்மை என்­ப­தற்கு அர்த்­தங்கள் வேறாக உள்­ளன. கொள்கை ரீதி­யாக அர­சி­யலில் பெரும்­பான்மை, அர­சி­யலில் சிறு­பான்மை என்று இங்கு நோக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் இலங்­கையில் பெரும்­பான்மை இனம், சிறு­பான்மை இனம் என்­கிற ரீதியில் நோக்­கப்­ப­டு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­து­கின்­றனர். பெரும்­பான்மை இனம் நினைத்­ததை சாதிக்கும் வல்­லமை கொண்­ட­தாக விளங்­கு­கின்­றது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான சட்­டங்­களை இயற்­றுதல், குடி­யேற்­றத்­திட்­டங்­களை ஏற்­ப­டுத்­துதல் எனப் பல விட­யங்­களும் பெரும்­பான்­மையின் ஆதிக்­கத்­தினால் சாத்­தி­ய­மா­கின்­றது. அர­சியல் ரீதி­யான சிறு­பான்­மைக்கு பதி­லாக இன ரீதி­யான சிறு­பான்மை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் பறி­போ­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கின்­றது. இது மிகவும் ஆபத்­தான ஒரு நிலை­யாகும். இலங்­கையில் சிறு­பான்­மை­யி­னரின் பின்­தங்­கிய நிலைமை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யி­னரில் தங்கி இருக்­கக்­கூ­டிய ஒரு நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்மை கையில் ஆட்­சி­ய­தி­காரம் உள்ள நிலையில் சிறு­பான்­மை­யினர் மௌனிக்க வேண்­டிய நிலை காணப்­ப­டு­வ­தையும் குறிப்­பிடுதல் வேண்டும். சிறு­பான்­மை­யினர் அர­சியல் ஆதிக்­க­மில்­லாத நிலையில் சிங்­க­ள­வர்­க­ளுடன் இணைந்து செயற்­படும் ஒரு போக்கு தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. 

மழுங்­க­டிப்பு நிலை

நாட்டின் சம­கால நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் சிங்­கள பௌத்­தர்­களின் இணைந்த செயற்­பாடு வலுப்­பெ­று­மா­க­யி­ருந்தால் சிறு­பான்­மை­யி­னரின் உரி மைக் கோஷங்கள் மழுங்­க­டிக்­கப்­படும் நிலைமை உரு­வாகும். சிறு­பான்­மை­யி­னரின் வகி­பங்கு அர­சி­யலில் ஆதிக்­க­மில்­லாத நிலையில் சிறு­பான்­மை­யி­னரை வேர­றுக்கும் இன­வா­தி­களின் கனவு சாத் ­தி­ய­மாகும். வடக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் அதி­க­முள்­ளன. காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான பிரச்­சி­னைகள் அர­சியல் கைதி­களின் விடு­தலை, நில மீட்பு தேவைப்­பாடு, இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு எனப்­பல விட­யங்கள் குறித்தும் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. மலை ­யக மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாத நிலையில் காணி­யு­ரிமை மற்றும் வீட்­டு­ரிமை தொடர்­பி லும் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, சமூக மேம்­பாடு, தொழில் விருத்தி செயற்­பா­டுகள் என்று இன்னும் பல விட­யங்­களும் மலை­யக மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்­டிய விட­யங்­க­ளாக உள் ­ளன. முஸ்லிம் மக்கள் அர­சியல் அதி­காரம் உள்­ளிட்ட மேலும் பல விட­யங்­க­ளுக்­காக குரல் கொடுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் பெரும்­பான்­மை­யி­னரின் அர­சியல் ஆதிக்கம் வலுப்­பெ­று­மி­டத்து சிறு­பான்­மை­யி­னரின் நிலைமை கேள் விக் குறி­யாகும். பேரி­ன­வாதம் மேம்­ப­டு­கையில் சிறு­பான்­மை­யி­னரின் கோரிக்­கை ­களை முன் வைப்­பது பெரும்­பாலும் சாதக விளை­வு­களை பெற்­றுத்­தர மாட்­டாது. 

இதே­வேளை நிலைமை எது­வாக இருந்­தாலும் பேரம் பேசும் சக்­தி­யினை சிறு­பான்மை கட்­சிகள் ஒரு போதும் கைவிடக் கூடாது என்றும் வெற்றி தோல்­வி­யினை பொருட்­ப­டுத்­தாது சிறு­பான்மை சக்­திகள் ஒன்­று­பட்டு அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுப்­ப­தனை வழக்­க­மாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஜே.வி.பி. வலி­யு­றுத்­து­கின்­றது. மேலும் மலை­யக அர­சி­யல்­வா­தி­களின் முரண்­பா­டான போக்­கு­க­ளையும், தனது அர­சியல் இருப்­பினை தக்­க­வைத்­துக்­கொள்ள அவர்­களில் சிலர் ஆடும் நாட­கத்­தி­னையும் ஜே.வி.பி.யின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் தெளி­வாக சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். முத­லா­ளித்­துவ அர­சாங்­கத்­தினை பாது­காக்கும் நோக்கில் மலை­யக அர­சி­யல்­வா­திகள் சிலரின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. அர­சாங்­கத்தின் அடி­வ­ரு­டி­க­ளான இவர்கள் பொது­மக்கள் நலன்­களை பேணு­வதை காட்­டிலும் சுய நலன்­களை பேணு­வதில் அதி­க­ளவில் அக்­கறை காட்­டு­கின்­றனர். மக்கள் பிழை­யான போக்­கி னைக் கொண்ட அர­சி­யல்­வா­தி­களின் பிழை­யான கருத்­து­களை உள்­வாங்கிக் கொண்டு வரு­கின்­றனர். இதி­லி­ருந்தும் அம்­மக்­களை மீட்­டெ­டுக்க வேண்டும். முத­லா­ளித்­துவ அர­சாங்­கத்­தினால் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னைகள் புறந்­தள்­ளப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் பாட்­டா­ளி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு செவி­சாய்க்கக் கூடிய பாட்­டாளி வர்க்க அரசு உரு­வாக வேண்டும். இதன் மூலமே பாட்டாளிகள் நன்மையடையும் நிலை உருவாகும் என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகர்.

சிறுபான்மையினர் வாக்கு

நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக் கம், மாகாணசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் என்­ப­வ­ற்றில் சிறு­பான்­மை­யி­ன ரின் பங்­க­ளிப்பு கடந்­த காலத்தில் அதிகமாக இருந்தது. சிறுபான்மை மக்கள் ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரிக்கும் கலாசாரம் அதிகமாகவே இருந்து வந்ததனையும் அவதானிக்கக் கூடியதாகவே இருந்தது. எனினும் அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு தோள் கொடுத்தவர்களுக்கு அரசாங்கம் உரியவாறு தோள் கொடுத்ததா? என்பதெல்லாம் கேள்விக்குரிய ஒரு விடயமேயாகும். இதேவேளை ஐ.தே.க. விற்கு ஆதரவு வழங்கிய மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் உரிய நன்மைகளை பெற்று கொண்டார்களா? என்றும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.க.வின் நிலைமை மோசமானதாக அமையக் கூடும் என்று இப்போதே கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 25 வீதத்துக்கும் குறைவான சிங்கள வர்களின் வாக்குகளை இக்கட்சி பெற்றுக் கொள்ளக் கூடும் என்று புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் சிறு பான்மை கட்சிகள் என்ன முடிவுக­ளை மேற்கொள்ளப் போகின்றன? 

இதேவேளை சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக மலையக கட்சிகள் ஏதேனும் ஒரு பெரும்பான்மை கட்சியின் பக்கம் சார்ந்துள்ளதால் பேரம் பேசும் நிலை மைகள் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி, இஸ்லாமிய பயங்கரவாத எதிர்நிலைகள் என்பன சிங்கள பௌத்த மக்களை ஒரு நிலைப் படுத்தியுள்ள நிலையில் சிறுபான்மை கட்சிகள் பொருத்தமான காய்நகர்த் தல்களை மேற்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு, மலையகம் என்பவற் றுக்கு அப்பால் இக்கட்சிகள் இணக்கப் பாட்டுடன் செயற்படவேண்டிய தேவை யும் மேலெழுந்திருக்கின்றன. தனிப் பட்ட குரோதங்கள், விரிசல்கள் என்ப வற்றை மறந்து விட்டுக் கொடுப்­பு­டன் செயற்பட வேண்டியுள்ளது. நாட்டின் சம கால சூழ்நிலை சுற்றுலாத்துறையோடு சிறுபான்மையினரின் எதிர்காலத்தையும் வீழ்ச்சியடையச் செய்து விடுமோ? என்ற இயல்பான அச்சமும் மேலோங்கியே காணப்படுகின்றது. 

துரை­சாமி நட­ராஜா