உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட வெடி குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்துபதுளை மாவட்டத்தில் சுற்றுலாதுறை மையமாக இருந்து வந்த எல்ல பிரதேசம் தற்போது பாழடைந்த பிரதேசமாக இருந்து வருகின்றது.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு எல்ல பிரதேசம் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் பிரகாசிக்கக் கூடியதாக இருந்தது.

தற்போதைய நிலையில் எல்ல பிரதேசத்தில் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலா பிரயாணியையும் காண முடியாமல் இருந்து வருகின்றது. 

இப்பிரதேசத்தில் ஆயிரத்து இருநூறு ஹோட்டல்கள் விடுதிகள் இருந்த போதிலும் தற்போது அவ் ஹோட்டல் மற்றும் விடுதிகள் ஆயிரத்து நூறு மூடப்பட்டுள்ளன. 

அத்துடன் அவ் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றிருந்த ஆயிரத்து ஐநூறு பேர் தொழில் வாய்ப்புக்களின்றி தத்தமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமல் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

 மேலும் இவ் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை கூட்டிச் செல்லும் வழிகாட்டிகள் பலரும் தமது தொழிலை இழந்துள்ளனர். அத்துடன் இச் சுற்றுலா பிரயாணிகளுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திய ஆட்டோக்கள, கார்கள்,வேன்கள் ஆகியனவற்றின் உரிமையாளர்கள் வருமானமின்றிய நிலையிலுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் எல்ல பிரதேசத்திற்கு வராமையினால் இப் பிரதேசம் தற்போது பாழடைந்த பிரதேசமாக காட்சியளிக்கின்றது. 

எல்லை நகரமும் நகரில் இருந்து வரும் ஓரிரு ஹோட்டல்களும் விடுதிகளும் வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகின்றன. இந்நிலை தொடரும் பட்சத்தில் எல்ல பிரதேச மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடுமென்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். 

எல்ல பிரதேச மக்கள் சுற்றுலா பிரயாணிகளின் வருகையினாலேயேஅவர்களின் வாழ்க்கை வளமாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்