புதுடில்லி, ( இந்தியன் எக்ஸ்பிரஸ்) பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையிலான அடுத்த  உத்தியோகபூர்வமற்ற உச்சி சந்திப்பை அக்டோபர் 11 வாரணாசியில் நடத்துவதற்கு இந்தியா யோசனையை முன்வைத்திருக்கிறது என்று தெரியவருகிறது. அந்த யோசனையை சாதகமான முறையில் பரிசீலனை செய்வதாக சீனத்தரப்பும் தெரியப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற உச்சி சந்திப்பு மத்திய சீனாவின்  ஹுபீய் மாகாணத்தின் தலைநகர்  வூஹான் நகரில் 2018 ஏப்ரல் 27 - 28 இடம்பெற்றது. அந்த நகரில் வாவியொன்றின் ஓரமாக அமைந்திருக்கும் விருந்தினர் விடுதியில் இருவரும் இரு தினங்களைக் கழித்தனர். அவர்கள் சுமார் 10 மணித்தியாலங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

 வூஹான் உச்சி சந்திப்பின்போது சீனத்தலைவர் செய்த விருந்தோம்பலுக்கு கைமாறு செய்வதற்கு இந்திய பிரதமர் ஆர்வமாக இருப்பதாக வட்டாரங்கள் கூறின.

  பாராளுமன்றத்தில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிக்கு சி. ஜின்பிங்கை அழைத்துச்செல்ல மோடி விரும்புவதாலேயே வாரணாசி தெரிவுசெய்யப்பட்டது. ' பிரிக்ஸ் ' உச்சிமகாநாட்டில் பங்குபற்றுவதற்காக மோடி சென்றபோது சி ஜின்பிங் சீனாவின் தென்கிழக்கு கரையோரமாக இருக்கும் துறைமுகநகரான சியாமென்னில் அவரை வரவேற்று உபசரித்தார்.சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சீன ஜனாதிபதி அந்த நகரில்  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து பணியாற்ற தனது முத்திரையைப் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2014 செப்டெம்பரில்  சி ஜின்பிங் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் தலைநகர் அஹமதாபத்திற்கு அழைத்துச்சென்று விருந்தோம்பினார். அதற்கு கைமாறாக  சீன ஜனாதிபதி 2015 மே மாதத்தில் தனது சொந்த மாகாணமான ஷாங்ஸியின் தலைநகர் சியானுக்கு மோடியை அழைத்து விருந்தோம்பல் செய்தார்.

 எதிர்வரும் அக்டோபரில் இந்தியாவுக்கு வருவதற்கு சீன ஜனாதிபதிக்கு நேரம் வசதியாக இருக்குமா என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக இராஜதந்திர வழிகளின் ஊடாக பூர்வாங்க அழைப்பு ஒன்றை இந்தியத் தரப்பினர் அனுப்பிவைத்திருக்கிறார்கள். உச்சி சந்திப்பு தொடர்பிலான மேலதிக  விபரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஷங்காய் கோர்ப்பரேசன் அமைப்பின்  உச்சி மகாநாட்டுக் காக ( ஜூன் 13 - 14 ) கிர்கிஸ் குடியரசின் தலைநகர் பிஷ்கெக்கிற்கு விஜயம் செய்யும்போது அங்கு வைத்து ஆராயப்படும்.

பிஷ்கெக்கில் மோடிக்கும் சி ஜின்பிங்கிற்கும் இடையில் ஒழுங்கமைவான இரு தரப்பு சந்திப் பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில்  டில்லியும் பெய்ஜிங்கும் இறங்கியிருப்பதாக வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறின. இரு தலைவர்களும் தங்களுக்கிடையிலான முதலாவது இரு தரப்பு சந்திப்பை பிஷ்கெக்கில் நடத்துவது சாத்தியம் என்று ஒரு வட்டாரம் கூறியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்திய டொக்லாம் முறுகல் நிலைக்கு முன்னதாக 2017 ஜூனில் ஷங்காய் கோர்ப்பரேசன் அமைப்பின் உச்சிமகாநாட்டுக்காக கசாகிஸ் தான் நாட்டு தலைநகர் அஸ்தனாவுக்கு சென்றிருந்தவேளையில் இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்துக்கொண்டனர். " வேறுபாடுகள் தகராறுகளாக மாறிவிடக்கூடாது " என்று அஸ்தனா சந்திப்பின்போதே இருவரும் ஒரு கருத்தொருமிப்புக்கு வந்தனர்.

டொக்லாம் எல்லைத்தகராறுக்கு 2017 ஆகஸ்டில் தீர்வு காணப்பட்ட பிறகு 2017  செப்டெம்பரில் சீனாவின் சியாமென்னில் ' பிறிக்ஸ் ' உச்சிமகாநாட்டுக்கு சற்று முன்னதாக 2017 ஜூனில் காணப்பட்ட அஸ்தனா கருத்தொருமிப்பு நினைவுபடுத்திக்கொள்ளப்பட்டது.

அதற்குப் பிறகு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற உச்சி சந்திப்புகளை நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தனர். அது தொடர்பான யோசனை அஸ்தனாவில் தான் தோன்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த 7 மாதங்களில்  வூஹானில் ஏப்ரலில்  உத்தியோகபூர்மற்ற உச்சி சந்திப்பை நடத்துவதை நோக்கமாகக்கொண்டு இரு தரப்பினரும் பணியாற்றினர்.

வூஹான் உச்சி சந்திப்பில் எட்டப்பட்ட புரிந்துணர்வு இதுவரையில் நல்ல பயனுடையதாகவே அமைந்திருக்கிறது என்பது இந்திய வெளியுறவுத்துறையின் மதிப்பீடாக இருக்கிறது. உத்தியோகபூர்வமற்ற உச்சி சந்திப்பு இரு நாடுகளின் தலைவர்களும் நீண்ட சந்திப்புகளை நடத்துவதற்கு வசதியான எடுத்துக்காட்டான ஒரு மாதிரி ஏற்பாடாகும்.

 வூஹான் உச்சி சந்திப்புக்கு பிறகு இரு தரப்பினதும் ஆயுதப்படைகளுக்கும்  இரு தலைவர்களி னாலும் " மூலோபாய வழிகாட்டல்" வழங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான கட்டுப்பாட்டு எல்லையோரம் எந்தவொரு துரதிர்ஷ்டவசமான பெரிய சம்பவமும் இடம்பெறாமல் 2018 ஆம் ஆண்டும் 2019 ஆண்டும் அமைதியானவையாகவே இருந்தன. 

 2014 செப்டெம்பரில் சி ஜின்பிங்கின் குஜராத் விஜயத்தின்போது காணக்கூடியதாக இருந்தததைப் போன்று  ( அப்போது சீன ஜனாதிபதியையும் முதல் பெண்மணி பெங் லியுவானையும் மோடி சபர்மதி நதி தீரத்தில் வரவேற்று விருந்தோம்பல் செயதார் ) உறவுமுறைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று பலர் எச்சரிக்கவும் செய்தனர். சீன ஜனாதிபதியின் அந்த இந்திய விஜயத்தின்போதே ஷுமார் எல்லையில் இந்தியப் படைகளுக்கும் சீனப்படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

 இது இவ்வாறிருக்க, அடுத்துவரும் மாதங்களில்  சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டத் துக்கு  இந்தியா எத்தகைய பிரதிபலிப்பை வெளிக்காட்டப்போகிறது  என்பது இரு நாடுகளுக் கும் இடையிலான எதிர்கால உறவுகளுக்கு முக்கியமானதாகும். வூஹான் உச்சிமகாநாட்டுக்குப் பிறகு ஒரு வருடம் கடந்திருந்த நிலையில், இவ்வருடம் ஏப்ரிலில் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரண்டாவது  மண்டலமும் பாதையும் செயற்திட்ட மகாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை. 2017 மே மாதம் நடைபெற்ற முதலாவது மண்டலமும் பாதையும் மகாநாட்டைப் போன்றே இந்த ஏப்ரிலிலும் சி ஜின்பிங்கின் பெருவிருப்புக்குரிய அந்த செயற்திட்டத்தை எதிர்த்தே இந்தியா அறிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.