வவுனியாவில் பனையோலை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிலையம் இன்று கைத்தொழில் கூட்டுறவு நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் புத்திக பத்திரனவினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா ஓயார்சின்னக்குளம் கிராமத்தில்  சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இக் கட்டடத்தொகுதியானது துளசி பனைபொருள் சார்ந்த உற்பத்தி நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ளதுடன் பனையோலை உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்குமான நிலையமாக செயற்படவுள்ளது.

பனம்பொருட்கள் உற்பத்தி கிராமம் என்ற தொனிப்பொருளில் அரும்பொருட் கலையகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு அருங்கலை வளர்ச்சிக்கான உந்துதலாக அமையவுள்ள இந் நிலையத்தினை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன திறந்து வைத்திருந்ததுடன் கைத்தொழில் உற்பத்தி பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார்.

கிராம மட்டத்தில் இருந்து கைத்தொழில் உற்பத்தியை பெருக்கி வருமானத்தினை ஈட்டும் நோக்கோடு ஆரம்பித்து வைக்கப்படும் இந்நிலையத்தின் திறப்பு விழாவில் தேசிய அருங்கலை பேரவையின் பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்டஉதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், அமைச்சர் ரிசாட் பதியுர்தீனின் இணைப்பாளர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.