முல்லைத்தீவு - முறிப்புப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றில் முல்லைத்தீவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வாகனத்தின் மூலம் கொண்டுசெல்ல முற்பட்டபோதே வனவளப் பிரிவினர் குறித்த வாகனத்தினை மடக்கிப்பிடித்துள்ளனர்.

மேலும் குறித்த மரக்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் ஏனையோர் தப்பி ஓடியுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதி வன அதிகாரி கே.அசாங்க கமல் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 30.05.2019 ஆம் திகதியன்று, நண்பகல் 12.30 மணியளவில், நாகசோலை ஒதுக்கக்காட்டில், முறிப்புத் தேக்கு வனத் தோட்டப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடு ஒன்று இடம்பெற்றது.

தேக்கு மரங்களை வெட்டி, 22குற்றிகளை டிப்பர் வகை வாகனத்தில் ஏற்றி, குற்றிகளின் மேல் சல்லிக்கற்களை பரப்பி யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்ல முற்பட்ட வேளை எம்மால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

மேலும் வட்டார வன அதிகாரி என்.ஆர்.கே.களப்பத்தியின் ஆலோசனைக்கமைய, நானும், வன வெளிக்கள உதவியாளர்களான வி.ரிஷிகேசன், எஸ்.அபிஷன்,எஸ்.மிரூஜன், ஆகியோர் இணைந்து இந்த மரக்கடத்தல் செயற்பாட்டை முறியடித்தோம்.

இதன்போது வாகனத்தின் சாரதி எம்மால் கைது செய்யப்பட்டார் ஏனையோர் தப்பி ஓடிவிட்டனர்.

இவ்வாறு எம்மால் கைதுசெய்யப்பட்ட வாகனத்தின் சாரதியை, 31.05.2019 அன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினோம்.

குறித்த சாரதியை பதின் நான்கு நாட்கள் விளக்கமறியலில் இருக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாகவும் பகுதி வன அதிகாரி தெரிவித்துள்ளார்.