கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இருபாலை தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தை ஊடறுத்து செல்லும் வெள்ளவாய்க்கால் புனரமைப்புக்கு யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வெள்ளவாய்க்கால் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டது.இதனால் அப்பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.குறிப்பாக மழைகாலங்களில். பாடசாலை செல்லும் மாணவர்கள் வயோதிபர்கள்,பெண்கள் என அனைவரும் போக்குவரத்து செய்யமுடியாத நிலைகாணப்பட்டது.

இந்நிலையில் குறித்த வெள்ளவாய்க்கால் புனரமைப்பு தொடர்பில் அப் பகுதி பிரதேச சபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்களினால் கோப்பாய் பிரதேச சபை அமர்வில் சிறப்பு பிரேரரணை கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் அம்மக்களின் அவலநிலையினை கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழுத்தலைவரும் யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெள்ளவாய்க்காலை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் உடனடியாக செயற்பட்ட அவர் விஷேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மில்லியன் ரூபாவினை வெள்ளவாய்க்கால் புனரமைப்பிற்காக ஒதுக்கியுள்ளதுடன் உடனடியாக புனரமைப்பு வேலைகளை ஆரம்பிக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.