ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படுமெனவும் வடக்கு மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதுடன் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு வரவேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது தமிழ்க் கூட்டமைப்பு நினைத்திருந்தால் அரசியல் தீர்வு தொடர்பான ஒரு ஏற்பாட்டை உள்ளடக்கியிருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அதற்கு ஆதரவு வழங்கினர். ஆனால் அதனை செய்யும் தேவை கூட்டமைப்புக்கு இருக்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி : நாட்டில் 10 வருடங்களாக நிலவிய அமைதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி என்ன நடந்தது?

பதில் : இந்த சம்பவத்தினால் பாரிய பாதிப்பு தமிழ் மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு இழப்புக்களை அடைந்து விட்டுக்கொடுப்புக்களை செய்து தற்போது மீண்டு வந்துகொண்டிருந்தனர். யுத்தம் என்பது வலிமிக்கது. அதனால் யாருக்கும் மகிழ்ச்சி கிடைக்காது. கடந்தகால யுத்தத்தில் பாரிய இழப்புக்களை சந்தித்து கஷ்டப்பட்ட மக்களாக தமிழ் மக்கள் உள்ளனர். விசேடமாக வடக்கு கிழக்கு மக்கள் இவ்வாறு உள்ளனர்.

அந்த மக்கள் தற்போது அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துக்கொண்டிருந்தனர். அவ்வாறான சூழலில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற்றதும் தமிழ் மக்கள் அச்சமடைந்துவிட்டனர். மீண்டும் யுத்தம் வருமா என அந்த மக்கள் பயந்துவிட்டனர். இது ஒரு இனத்தையும் மதத்தையும் அடிப்படையாகக்கொண்டு ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் மேலும் அச்சமடைந்திருப்பார்கள்.

சிறுபான்மைக்குள் சிறுபான்மையாகிவிடுவோமோ என்ற அச்சம் அந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனால் தமிழ் மக்களுக்கு தான் இதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வாறு ஒரு சம்பவம்

இடம்பெற்றதும் தமிழ் மக்கள் அசெளகரியப்படும் வகையில் நிலைமை ஏற்பட்டது. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டபோது முன்னாள் போராளி ஒருவரே சந்தேக நபரானார்.

தடுக்க வைக்கப்பட்டிருந்தார். எனினும் தற்போது உண்மை தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினை மீண்டும் வந்தால் தாம் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடுவோமோ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு உள்ளது.

கேள்வி : இந்த அசம்பபவிதத்தின் பின்னர் அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன?

பதில் : அரசாங்கம் எனும்போது நடவடிக்ககைகள் எடுக்கும்போது சில குறைபாடுகள் இருக்கலாம். தடைகள் ஏற்படலாம். இது எனக்கு அனுபவம் ஊடாக தெரியும். 1988 களில் தெற்கு மக்களே அதிகளவில் நெருக்கடிளுக்கு முகம்கொடுத்தனர். விகாரைகளே இலக்கு வைக்கப்பட்டன. அதன் பின்னர் புலி பிரச்சினை வந்தது. அப்போது வடக்கு கிழக்கு மக்கள் கஷ்டப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் வந்ததும் நாங்கள் இலக்கு வைக்கப்பட்டோம்.

எங்களை பயங்கரவாதிகள் போன்று நடத்தினர். எம்மை சிறையில் அடைத்தனர். ராஜபக்ஷ அரசில் இருந்தவர்களை சிறையில் அடைத்தனர். தற்போது இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். எனவே நாம் மிகவும் பொறுமையாக செயற்படவேண்டும். பாதுகாப்பு தொடர்பில் நான் எதுவும் கூறுவது சரியாக அமையாது. நாம் யுத்தம் செய்யும்போது தொப்பிகலையை வெறுமனே கல் என்று கூறினர். காடு என்று கூறினர். கிளிநொச்சிக்கு மதவாச்சி என்றும் அலிகமங்கடவுக்கு பாமன்கடை என்றும் கூறினர். ஆனால் அவ்வாறு நாங்களும் கூறக்கூடாது. மக்களின் மன ஓட்டம் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்படவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கேள்வி : மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியுமா?

பதில் : தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் என்னால் திருப்தியடைய முடியாது. மக்கள் திருப்தியடைகின்றனரா என்று பார்க்கவேண்டும். பாடசாலை செல்லும் மாணவி பயணிகள் சந்தைக்கு செல்லும் தாய்மார் அலுவலகங்களுக்கு செல்கின்றவர்கள் ஆகியோரின் பயமும் சந்தேகமும் நீங்கவேண்டும். பிரசார ஊடகங்கள் ஊடாக அதனை செய்ய முடியாது.

கேள்வி : இந்த தாக்குதல்களை நடத்திய அமைப்புக்கள் உங்கள் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே?

பதில் :அமைப்புக்கள் எப்போது ஆரம்பமாகின்றன என்பதை பார்க்கக்கூடாது. மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது புலிகள் தனது காலத்தில் உருவாகவில்லை என்று கூறியிருக்கலாம் அல்லவா? அது விடயமல்ல. நாட்டை பொறுப்பேற்கும்போது வளங்களுடன் பிரச்சினைகளையும் பொறுப்பேற்கவேண்டும். நாம் நாட்டை பொறுப்பெடுக்கும்போது பல பிரச்சினைகள் இருந்தன. அதன் பின்னர் அவற்றுக்கான பொறுப்பை ஏற்று செயற்பட்டோம். நாங்கள் ஒரு பிரச்சினையை தீர்த்தோம்.

அதன்பின்னர் மற்றுமொரு பிரச்சினை உருவாகிக்கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே அதனை கிள்ளி எறிந்திருக்கலாம். தற்போது பாரிய சுமை ஏற்பட்டுள்ளது.

கேள்வி : உங்களுடன் நெருங்கிப் பழகிய பணியாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. அது தொடர்பில் ?

பதில் :தனிப்பட்ட நபர் குறித்து இங்கு எந்தப் பி்ரச்சினையும் இல்லை. மனிதர்களை நாம் மதிப்பிடுகின்றோம். பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் பிரதிநிதியாகவே அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நாங்கள் பார்த்தோம். அவருக்கு நாங்கள் உதவி செய்யவில்லை.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கே உதவினோம். ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்தது என்பதனை பார்க்கவேண்டும். அதாவது இந்த அரசாங்கம் தனி நபருக்கு உதவி செய்ததா அல்லது மக்களுக்கு உதவி செய்ததா என்பதனை பார்க்கவேண்டும் அமைச்சருக்கு செய்த உதவிகள் தொடர்பில் பட்டியல் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நாங்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவினோம். பாடசாலைகள் நிர்மாணித்தோம்.

வைத்தியசாலைகள், பாதைகள், ரயில் சேவைகள் என்பனவற்றை கொண்டுவந்தோம். வாழ்வாதாரத்தை கொண்டுவந்தோம். இவ்வாறு நீண்ட பட்டியல் உள்ளது. ஆனால் கூட்டமைப்பினருக்கு உதவ வில்லை. அதனால் அவர்கள் எமக்கு எதிராக செயற்பட்டனர்.

நான் தற்போது பாராளுமன்றத்தில் இல்லை. அதனால் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச விளையவில்லை.

எனினும் ரிஷாத் பதியுதீன் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாகவே குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவை குறித்து விவாதிக்கப்படவேண்டும். அவர் எம்மிடம் இருந்து பிரிந்ததை நாங்கள் அரசியல் விடயமாகவே பார்க்கின்றோம்.

அதன்படி அரசியல் ரீதியில் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும்.

கேள்வி : தாக்குதலுக்கு முன்னர் இந்தியா எச்சரிக்கை தகவல் வழங்கியதாக கூறப்படுகின்றதே?

பதில் : உண்மையில் இந்த விடயத்தில் இந்தியா வேதனையில் இருப்பது எங்களுக்கு தெரிகின்றது. நான்காம் திகதி 10 ஆம் திகதி மற்றும் தாக்குதலுக்கு முதல்நாளும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். ஆனால் சம்பவத்தின் பின்னர் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் வரவழைக்கப்பட்டு உதவிகள் பெறப்படுகின்றன.

எனினும் இந்தியாவிடம் இதுவரை உதவி பெறவில்லை. என்னை பொறுத்தவரையில் இது கவலைக்குரிய விடயமாகும். இந்தியா தகவல் அளித்துள்ளது. நாங்கள் தகவல் தருபவருடன் கோபிக்கக்கூடாது. 

எனினும் இந்தியாதான் நாம் உதவி பெறவேண்டிய முதல் நாடாகும். எங்களினால் தனித்து அனைத்தையும் செய்ய முடியுமாயின் அது சிறந்த விடயமாகும். அதற்கான முன்னேற்றத்தை நாம் செய்யவேண்டும். எனினும் சர்வதேச சமூகத்திடம் உதவி பெறுவதாயின் முதலில் இந்தியாவிடம்தான் பெறவேண்டும்.

கேள்வி :இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துள்ளது. அது தொடர்பில் ?

பதில் : மோடியின் வெற்றியை நாம் நாடு என்ற ரீதியிலும் கட்சி என்ற ரீதியிலும் மகிழ்ச்சியடைகின்றோம். தற்போதைய நிலைமையில் இந்தியா வலிமையாக இருப்பது பிராந்தியத்துக்கும் எமக்கும் பலமாகும். மகா பாரதம் பலமடைவது எமக்கு நல்லது. 

கேள்வி : மோடியின் அரசாங்கத்துடன் உங்களுக்கு 2014 ஆண்டு காலப்பகுதியில் விரிசல்கள் காணப்பட்டனவே?

பதில் : தவறான புரிதல்கள் இருந்தன. 2010 களில் எனது தலைமையில் இந்தியாவுடன் செயற்படும்போது சிறந்த உறவு காணப்பட்டது. பின்னர் நான் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அப்போது இந்திய விடயத்தில் ஈடுபட முடியாமல் போனது. உண்மையில் அது எமது பக்கம் இருந்த குறைபாடாகும். அதனை திருத்தி முன்செல்லவேண்டும். இந்தியாவே எமது முதலாவது சர்வதேச நண்பன் என்பதனை மறந்துவிடக்கூடாது.

கேள்வி : நீங்கள் வட மாகாண சபைத் தேர்தல் குறித்து பேசிவருகின்றீர்கள். வட மாகாண சபையின் தற்போதைய தொடர்பில் ?

பதில் : அது பாரிய அநியாயம். அதிகாரத்தை கோரும் தமிழ்க் கூட்டமைப்பு அனைத்து அதிகாரங்களையும் ஆளுநருக்கு வழங்கியுள்ளது. அன்று அவசரமாக கொண்டுவரப்பட்ட சட்டமூலத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு கைகளை உயர்த்தியமையே இதற்கு காரணமாகும். இல்லாவிடின் இன்று மாகாண சபை மீண்டும் நிறுவப்பட்டிருக்கும். இருக்கின்ற மாகாண சபையை காப்பாற்றாமல் மேலும் அதிகாரத்தை எவ்வாறு கோர முடியும்? அது சட்டவிரோதமானதாகும். முன்னாள் பிரதம நீதியசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது மாகாண சபை என்பது ஆளுநர் அல்ல என்று அவர் தீர்ப்பளித்துள்ளார். மக்கள் இறைமையானது தேர்தலில் தெரிவு செய்யப்படும் மாகாண சபை ஊடாகவே உறுதிபடுத்தப்படுகின்றது. இந்த நிலைக்கு கூட்டமைப்பே பொறுப்புக்ககூறவேண்டும். குறைந்த பட்சம் வடக்கு மக்களுக்கு கூட்டமைப்பினர் என்ன செய்தனர்?

19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தபோது அதனை கூட்டமைப்பினர் முன் நின்று செய்தனர். அந்த 19 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்காக எதனையாவது செய்திருக்கலாம். அதில் ஏதாவது ஒரு ஏற்பாட்டை உட்படுத்தியிருக்கலாம். எமது அரசாங்கங்களுக்கு 2005 இலும் 2010 இலும் மக்கள் வடக்கு கிழக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்துக்கு 2015 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவு வழங்கினர். வடக்கு கிழக்கு மக்களினால்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. காரணம் நாங்கள் 7 மாகாணங்களில் 2 இலட்சம் வாக்குகளினால் நாங்கள் வெற்றி.பெற்றோம். வடக்கு கிழக்கில் 4 இலட்சம் வாக்குகளினால் தோற்றோம். எனவே இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கியிருக்கவேண்டும்.

தீர்வுத்திட்டத்தை பெற்றிருக்கலாம். கூட்டமைப்பு நினைத்திருந்தால் செய்திருக்கலாம். இரண்டு தடவைகள் பிரதமரை காப்பாற்றினர். நாங்கள் எமது ஆட்சியில் வேலை செய்தோம். அபிவிருத்தி செய்தோம். பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தினோம். நாங்கள் தீர்வுத்திட்டத்தை வழங்கவில்லை என்று மக்கள் நினைத்தனர்.

தற்போதைய அரசாங்கம் அதனை செய்திருக்கலாம். ஆனால் இன்று தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

கேள்வி : 19 ஆவது திருத்தத்தை கொண்டுவரும்போது அரசியல் தீர்வு விடயத்தில் ஏதாவது செய்திருக்கலாம் என்று கூறுகின்றீர்களா?

பதில் : மிக இலகுவாக செய்திருக்கலாம். காரணம் அனைத்துக் கட்சிகளும் அந்த திருத்தத்துக்கு ஆதரவளித்தன. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் .தேவையானதை அதில் உள்ளடக்க முடியும் என்றால் ஏன் கூட்டமைப்பின் யோசனையை அதில் முன்வைக்கவில்லை?

கூட்டமைப்பினர் 19 ஐ உருவாக்குவதில் பங்களிப்பை வழங்கினர். அப்படியானால் அதன்போது தீர்வு குறித்து செயற்பட்டிருக்கலாம். நீண்டகால செயற்பாடு அவசியமில்லை. இந்த அரசாங்கத்தில் இனி எதுவும் செய்ய முடியாது. மீண்டும் ஏதாவது செய்வதென்றால் அது எதிர்கால மஹிந்த அரசில் மட்டுமே முடியும்.

எனவே தற்போதாவது வடக்கு மக்கள் எம்முடன் எமது கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு கோருகின்றோம். அதற்கு மக்களுக்கு இடமளிக்கவேண்டும். எமது கட்சி இனவாத கட்சியல்ல. ஒரு மதத்துக்கு சொந்தமான கட்சியல்ல. நாங்கள் கட்சியாக வடக்கு மக்களுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம். அதற்கு தயாராக இருக்கின்றோம்.

கேள்வி :அப்படியானால் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசியல் தீர்வை வழங்குவீர்களா?

பதில் : வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் போன்றவற்றின் ஊடாக அபிவிருத்தியை மேற்கொண்ட நாங்கள் அதுதான் மக்களின் தேவை என்று நினைத்தோம். காரணம் எமக்கு ஆலோசனை வழங்க யாரும் இருக்கவில்லை. ரிஷாத் மற்றும் டக்ளஸ் மட்டுமே இருந்தனர். நாங்கள் இங்கிருந்து வடக்கு மக்களுக்கு என்ன தேவை என்று கூற முடியாது. எனவே இனியாவது வடக்கு மக்கள் எம்முடன் இணையவேண்டும். வடக்கு மக்களை விருப்பத்துடன் அரவணைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாம் ஒன்றாக அமர்ந்து பேச்சு நடத்தி வடக்கு மக்களுக்கு என்ன தே.வை என்பதனை தீர்மானிப்போம்.

அதற்கு வடக்கு மக்களுக்கு இடமளிக்கவேண்டும். வரலாற்றில் .செய்த தவறுகளை மீண்டும் செய்யவேண்டாம்.

கேள்வி : அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

பதில் : மக்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதனை கூறவேண்டும். கேள்வி அதனை அவர்கள் தமது பி்ரதிநிதிகள் ஊடாக அல்லவா கூறவேண்டும்?

பதில் வடக்கு பிரதிநிதிகள் எம்முடன் இணைந்து செயற்படவேண்டும். தமிழ் மக்கள் எமது கட்சியில் முக்கிய இடங்களை வகிக்கவேண்டும்.

தீர்மானம் எடுக்கும் இடத்துக்கு தமிழ் மக்கள் வரவேண்டும். தற்போது நாட்டில் இனரீதியாக கட்சிகள் அமைக்கக்கூடாது என்று என்ற கருத்து நிலவுகின்றது. அப்படியாயின் பிரதான கட்சிகள் சிறுபான்மையினங்களுக்கு உரிய இடத்தை வழங்கவேண்டும். சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தபோது பண்டாரநாயக்க அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். அனைத்து இனங்களினதும் சார்பில் பொதுச் செயலாளர்களை நியமித்தார். ஆனால் இன ரீதியான கட்சிகள் பின்னர் ஆரம்பிக்கப்பட்டபோது பிரதான கட்சிகளில் இருந்த சிறுபான்மையினர் அவற்றுக்கு செல்ல ஆரம்பித்தனர். சிறுபான்மை மக்களுக்கு முழுமையான இடத்தை வழங்க எமது கட்சி தயாராக இருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் எமது கட்சியில் இணைந்து தீர்மானம் எடுக்கும் கட்டத்துக்கு வரவேண்டும் என்பதில் விருப்பத்துடன் இருக்கின்றோம்.

எம்மால் தேசிய பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும். நாங்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவோம். அதன் பின்னர் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும். அந்த தீர்வு சிறந்ததாக அமையவேண்டுமாயின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து எமது வெற்றிக்கு பங்களிப்பு செய்யவேண்டும்.

கேள்வி : உங்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பதில் : ஜனாதிபதி வேட்பாளரை. விட ஒரு நபர் என்ற ரீதியில் எமது தலைவர் மஹிந்தவையே நாம் ஏற்கின்றோம். அடுத்ததாக எமது கட்சி மற்றும் கொள்கைகளை முக்கியத்துவம் பெறுகின்றன. எப்படியும் மஹிந்த ராஜபக்ஷ பெயரிடும் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறுவார். காரணம் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் முன்னிற்பார். அவர் பெயரிடம் வேட்பாளர் வெற்றிபெறுவார். எமது பொதுஜன பெரமுன கட்சியை ஆசியாவில் பலமான கட்சியாக உருவாக்கும் வகையில் அமைப்புக்களை உருவாக்கி ஏற்பாடுகளை செய்கின்றோம். தற்போது இந்தியாவின் மோடியின் கட்சி அந்த இடத்துக்கு வந்துள்ளது. நாட்டில் 14029 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அதில் 12483 பிரிவுகளி்ல் நாங்கள் அமைப்புக்களை நிறுவி செயற்படுகின்றோம். உண்மையில் வடக்கு கிழக்கில் இது குறைவாக உள்ளது. அதனை பலப்படுத்தவேண்டும். 

கேள்வி : பரந்துபட்ட கூட்டணியை அமைக்க சுதந்திரக் கட்சியுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு உள்ளன?

பதில் : சுதந்திரக் கட்சி நாம் இருந்த கட்சியாகும். அதில் உள்ள மக்களை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. ஆனால் சிறந்த முன்னேற்றம் அதில் இல்லை. சுதந்திரக் கட்சியில் உள்ள அனைவரும் எம்முடன் இணைந்துவிடுவார்கள்.

கேள்வி : ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?

பதில் : சுதந்திர கட்சியின் யுகத்துக்கான வகிபாகம் முடிந்துவிட்டது என்றே கருதுகின்றோம். இன்று சமஷ்டி கட்சியை பற்றி யாரும் பேசுவதில்லை. தற்போது கூட்டமைப்பு செயற்படுகின்றது. ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கட்சி குறித்து யாரும் பேசுவதில்லை.

கேள்வி : உங்களுக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பம் இல்லையா?

பதில் : இல்லை. நான் அவ்வாறான ஒருவர் அல்ல. மௌனமாக தலைவருக்கு உதவுவதே எனது விருப்பமாகும்.

கேள்வி : தற்போது ஐந்து வருடங்களாக எம்.பி. யாக இல்லை. எவ்வாறு உணர்கின்றீர்கள்?

பதில் : சுதந்திரமாக இருக்கின்றேன்.

கேள்வி : நீங்கள் ஆட்சியிலிருந்தபோது அடிக்கடி உங்களுடன் முரண்பட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். அதனைப்பற்றி ?

பதில் : நான் வாழ்த்துகின்றேன். மக்களே தீர்மானிக்கவேண்டும்.

கேள்வி : தீர்வைப் பெறும் நோக்குடன் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் போக்கை கடைபிடித்த கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்பு வீணாகிவிட்டதாக கருதுகின்றீர்களா?

பதில் : நான் அவ்வாறு நினைக்கவில்லை. கூட்டமைப்பு நினைத்திருந்தால் அதனை செய்திருக்கலாம். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்பட்டது. மக்களுக்காக எதனையும் செய்யும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. நோக்கம் இருந்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம். அதற்கான சந்தர்ப்பம் இருந்தது. அதனால் வடக்கு மக்களுக்கு ஒன்றை கூறுகின்றேன்.

உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்கு பாதுகாப்பு வழங்க உங்கள் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் இருக்கின்றோம். ஆனால் உங்கள் தேவை வேறானதாக இருக்கலாம். எனவே உங்கள் தேவை என்ன என்பதனை அறிய நாங்கள் விருப்பத்துடன் இருக்கின்றோம். எம்முடன் இணைந்து உங்கள் தேவையை நீங்களே நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

நேர்காணல்- ரொபட் அன்டனி