தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24  குடும்பங்களை சேர்ந்த 103 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது இவர்கள் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பார்வையிடுவதற்காக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் ஒலிரூட் தோட்டத்திற்கு விஜயம் செய்தார்.

இவருடன் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன், தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பாலமுரளி, நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம்,  பிரதேச முக்கியஸ்தர்களும் சென்றிருந்தனர்.

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக கூடாரங்களை அமைப்பதற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார்.