உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? எனக் கூறி இங்கிலாந்து இளவரசர் ஹரி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பிஞ்சை கிண்டல் செய்துள்ளார்.

12 ஆவது ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட்  தொடரில் கலந்துகொள்ளும்  10 அணிகளின் தலைவர்களும் நேற்று முன்தினம் லண்டனில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து உரையடினர்.

இதன்போது இங்கிலாந்து ராணியுடனிருந்த இளவரசர் ஹாரி, அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்சிடம் ‘உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? இன்னுமா அணியில் இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தான் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள்’ என்று கேட்டார். 

அதற்கு 32 வயதான ஆரோன் பிஞ்ச் சிரித்தபடி,‘ 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறேன்’ என்று மட்டும் பதில் அளித்தார். 

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு யாருக்கு? என்று ஹாரி திரும்ப திரும்ப கேட்ட போது பிஞ்ச் எரிச்சலுடன், ‘இங்கிலாந்து, இந்தியா’ என்று கூறியபடி சென்றார். 

அத்துடன் இளவரசர் ஹரி இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிடம், ‘உற்சாகமாக இருங்கள். போட்டியை அனுபவித்து விளையாடுங்கள். இல்லாவிட்டால் இங்கு ஆடியே பிரயோசனம் இல்லை’ என்றார்.