‘அஜித்திற்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் அவரின் இரசிகன்’ என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது அஜித் பங்குபற்றவில்லை. இது குறித்து விஷால் பல சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளிப்பதற்காகவும், நடைபெற்று முடிந்த கிரிட்கெட் போட்டி வெற்றிகர அமைந்ததற்கும் நன்றி தெரிவிப்பதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது,

நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளாததால் அவர் மீது கோபம் இல்லை. கலந்துகொள்ளாத யார் மீதும் கோபம் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். அஜித்தின் கருத்தை மதிக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. எனக்கும் அஜித்துக்கும் எவ்விதப் பிரச்சனையும் கிடையாது. சக நடிகர்களிடம் பிரச்சனை செய்வதற்காக நடிகர் சங்கத்துக்கு வரவில்லை. நான் அவருடைய பாடலை நிறுத்தச் சொன்னதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை. ஒரு இணைய தளத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தோல்விக்கு தமிழக மக்களே காரணம் என்று செய்தி வெளியாகியிருந்தது. நான் அப்படியொரு பேட்டியை யாருக்கும் தரவில்லை. அந்த செய்தி முற்றிலும் போலியானது. இனிமேல் யாராவது என்னைப் பற்றி செய்தி வெளியிடும் முன் என்னை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

தகவல் : சென்னை அலுவலகம்