(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 தற்கொலை தாக்குதல்களில் தற்கொலைதாரிகளாக செயற்பட்டவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபட்ட  தொலைபேசி இலக்கங்கள் என  1800 க்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

இதனைவிட சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியன முன்னெடுக்கும் விசாரணைகளில் கைதுசெய்யப்பட்ட 87 பேர் தொடர்ந்தும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவ்வந்த விசாரணைப் பிரிவுகளில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

அதில் சி.ஐ.டி.யில் 7 பெண்கள் உள்ளிட்ட 66 பேரும் சி.ரி.ஐ.டி.யில் இரு பெண்கள் உள்ளிட்ட 21 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை இந்த விசாரணைகளில்  23 மடிக்கணினிகள், மூன்று மேசைக் கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், டெப்கள், 30 வன் தட்டுக்கள், 12 பென் ட்ரைவ்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு அறையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அவற்றிரில் உள்ள தகவல்களைப் பெற்று அவற்றை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதனைத் தவிர, இறுவட்டுகள், DVD, DVற் உபகரணங்கள் 67 உம் , 142 சிம் அட்டைகளும்  டிஜிட்டல் பகுப்பாய்வு அறையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.