(எம்.ஆர்.எம்.வஸீம்)

ரிஷாத் பதியுதீனை சட்டத்துக்கு முன்நிறுத்துனால் அவருடன் இருக்கும் ஐந்துபேரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். 

அதனால் ஆட்சி தொடர்பில் சிந்திக்காமல் பிரதமர் ரிஷாதை விசாரணைக்குட்படுத்தவேண்டும். அத்துடன் அவருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தற்போது ஒப்புவிக்கப்பட்டு வருகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பரிவர்த்தன கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் அமைச்சர் ரிஷாத் தொடர்புகளை பேணிவந்திருப்பதுடன் அவர்களுக்கு உதவிகளையும் செய்து வந்திருக்கின்றார்.இதுதொடர்பான பல விடயங்கள் தற்போது வெளிப்பட்டுள்ளதுடன் அவை ஒப்புவிக்கப்பட்டும் வருகின்றன. அதனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தால் அவரும் அவருடன் இருக்கும் 5உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிடும் என்ற அச்சத்திலே தெரிவுக்குழு அமைத்து அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ரிஷாத் பதியுதீனை விசாரணைக்கு முற்படுத்தினால் அவருடன் இருக்கும் 5பேரில் 4பேர்  அவரைவிட்டு விலகி தனித்து கட்சியை கொண்டுசெல்லவே முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது. அதனால் பிரதமர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.