கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர்  9 தற்கொலைதாரிகள் மேற்கொண்ட 1800 தொலைபேசி அழைப்புக்கள் குறித்து தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 66 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 23 மடிக்கணினிகள், 3 கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், 30 வன் தட்டுக்கள், 12 பென்டிரைவ்கள், 142 சிம் அட்டைகள்  ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.