பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்ட மாணவி உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேசில் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்பிரலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இவர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நஸ்ரட் ஜகான் ரபி என்ற மாணவி தான் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாவதாக பொலிஸாரிடம் முறையிட்டதுடன் தனது பாடசாலை அதிபர் மீதும் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். எனினும் அவர் சிறையிலிருந்தபடி மாணவியை கொலை செய்வதற்காக சதிதிட்டம் தீட்டியுள்ளார்.

குறிப்பிட்ட மாணவியை கொலை செய்வதற்காக பலரை ஏற்பாடு செய்த அவர் அது தற்கொலைபோன்று காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 6 ம் திகதி மாணவி  உயிருடன் எரிக்கப்பட்டார்.

புர்கா அணிந்த அடையாளம் தெரியாதவர்கள் அவரை பாடசாலையின் மேற்தளத்திற்கு அழைத்துசென்று அவர் மீது மண்ணெண்ணையை  ஊற்றி கொழுத்தினர்.

பலத்த காயங்களுடன் போராடிய மாணவி மரணிப்பதற்கு முன்னர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் 16 பேரை கைதுசெய்துள்ளனர்.

இந்த கொலையில் ஈடுபட்டவர்களிற்கு மரண தண்டனையை வழங்கவேண்டும் என பங்களாதேசில் குரல்கள் எழுந்துள்ளன.

கொலையுடன் தொடர்புபட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பங்களாதேஸ் பிரதமர் உறுதியளித்துள்ளார்