(எம்.மனோசித்ரா)

பிரஜை ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சகல ஆவணங்களும் ஒரே இலக்கத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும் என சுதந்திர கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

வெளிநாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள வழிபாட்டு ஸ்தலங்கள் என்பவற்றுக்கு வழங்கப்படுகின்ற நிதி நேரடியாக அவர்களுக்கு செல்லாமல் மத்திய வங்கிக்கு ஊடாக வழங்கப்பட வேண்டும். அத்தோடு நிதி வழங்கப்படுவதற்கான காரணம் மற்றும் யாரால் வழங்கப்படுகின்றது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் உள்ளடங்கிய யோசனைகளை சுதந்திர கட்சி சமர்பித்துள்ளது. அந்த யோசனைகளின் பிரதானமாக இந்த விடயத்தை உள்ளடக்கியுள்ளோம். இது தொடர்பாக மத்திய வங்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

சுதந்திர கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் நாட்டில் பிரஜை ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சகல ஆவணங்களும் ஒரே இலக்கத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கூறியதாவது, 

ஒரு பிரஜையை அடையாளப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை , பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு பதிவு புத்தகம் என்று பல ஆவணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இலக்கங்களில் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் இரு ஆவணங்களையும் வைத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.