தயாரிப்பாளர், இயக்குனர் ,நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட சசிகுமார் பெயரிடப்படாத புதிய படத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலராக நடிக்கிறார்.

நாடோடிகள் 2, கென்னடி கிளப் ,கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான சசிகுமார் அடுத்ததாக, மலையாள பட இயக்குனர் ஜி என் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் .இதில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மானசா ராதாகிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் குரு சோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புகுட்டி, பசங்க சிவகுமார், நடிகைகள் சுஜாதா, வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் தெரிவிக்கையில்,“ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியாக  சசிகுமார் நடிக்கிறார். இன்வெஸ்டிகேட் திரில்லராக தயாராகும் இந்தப் படத்தின் வசனங்களை அருள் செழியன் எழுதி இருக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.” என்றார்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ராப்பல் இசை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பாக ஹிதேஷ் ஜபக் தயாரிக்கும் 14 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.