இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க  இடம்பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக்கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.

பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ள நிலையில், மோடி இன்று பதவியேற்கின்றார். 

அதை ஏற்று மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2 ஆவது முறையாக பிரதமர் ஆகிறார்.

பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், சத்தியப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

மோடியுடன் அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் மீண்டும் மந்திரி ஆகிறார்கள்.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பை ஏற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

ஆந்திர முதல்-மந்திரியாக வை.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற பின்னர் அவர் டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கு கொள்கிறார்.

மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் ஜனாதிபதி  யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, அஜய் பிராமல், ஜோன் சேம்பர்ஸ், பில் கேட்ஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, விளையாட்டு பிரபலங்களான பி டி உஷா, ராகுல் டிராவிட், அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், சாய்னா நேவால், புல்லேலா கோபிசந்த், தீபா கர்மாகர் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், கங்கனா ரணாவத், ஷாரூக்கான், சஞ்சய் பன்சாலி, கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் அரசியல் கலவரத்தில் பலியான 50 பாரதீய ஜனதா தொண்டர்களின் குடும்பத்தினருக்கும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும்.

ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8,000 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதனால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும். பதவி ஏற்பு விழா ஒன்றரை மணி நேரம் நடைபெறும் விழா முடிந்ததும், அதில் கலந்துகொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.

இந்நிலையில், இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

இதற்கிடையே, யார்-யாரை மந்திரிகளாக நியமிக்கலாம்? என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை மந்திரி பதவிகள் வழங்கலாம்? என்பது குறித்தும் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் மோடி நேற்று 2 ஆவது நாளாகவும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பீகார் முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரும் நேற்று அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், தங்கள் கட்சிக்கு 2 மந்திரி பதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி, மோடி அரசில் மீண்டும் அதே அமைச்சுக்கு மந்திரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

5 மணிநேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது, ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்களில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

பாஜகவில் ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், அமைச்சரவையில் அமித் ஷாவை இம்முறை இடம்பெறச் செய்தால் பாஜகவுக்கு புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு வியூகம் வகுத்து தரும் அமித் ஷாவை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கூடாது என பாஜகவில் இருந்து வரும் குரல்கள் பற்றியும் மோடி ஆலோசித்ததாக தெரிகிறது.

மொத்தம் 65 அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் இடம் பெறுவர் என தகவல் வெளியாகி உள்ளது.

இன்று 3 ஆவது நாளாக  பா.ஜனதா தலைவர் அமித்ஷா  நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

ஒவ்வொரு கூட்டணி கட்சிகளிலும், ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா  இருப்பார். அவர் அமைச்சரவையில் இணைந்தால்  ஜெபி நட்டா, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் கட்சி தலைவராக வாய்ப்பு உள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா முக்கிய மாநிலங்களில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களின் காரணமாக கட்சித் தலைவராக அமித் ஷா தொடர்ந்து இருக்க கட்சி பிரிவுகள்  விரும்புகின்றன.

மத்திய அமைச்சரவையில் அதிக மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒடிசா, வங்காளம் மற்றும் வடகிழக்கு மண்டலங்கள் உட்பட பி.ஜே.பி-க்கு புதிதாக வரவேற்பு பெற்ற மாநிலங்களுக்காக சில சிறிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை உத்தேச பட்டியல் : அ.தி.மு.க.  - ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம், லோக்ஜன் சக்தி - ராம் விலாஸ் பாஸ்வான், சிவசேனா - அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தளம் - ஆர்சிபி சிங், அகாலிதளம் - ஹர்சிம்ரத் பாதல் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.